துபாயின் அல் ரஷீதியாவில் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார் 9 வயது சிறுமி. அப்போது எங்கிருந்தோ ஓடிவந்த நாய் சிறுமியின் கைகளில் கடித்திருக்கிறது. திடுக்கிட்டு ஓடிவந்த பெண் பணியாளர் சிறுமியை காப்பாற்றியிருக்கிறார். உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து நாயின் உரிமையாளரை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கிறது சிறுமியின் குடும்பம். வழக்கை விசாரித்த துபாய் நீதிமன்றம் 35 வயதான நாயின் உரிமையாளருக்கு 5,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்தது. பின்னர் மேல்முறையீட்டுக்குச் சென்ற சிறுமியின் குடும்பத்திற்கு நாயின் உரிமையாளர் 2000 திர்ஹம்ஸ் தொகையை இழப்பீடாக வழங்கும்படி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து நாயின் உரிமையாளரின் மீது சிவில் வழக்கை சிறுமியின் குடும்பம் தொடுத்தது. மேலும் இழப்பீடாக 1 லட்சம் திர்ஹம்ஸ் தொகையை வழங்கவேண்டும் எனவும் சிறுமியின் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 15,000 திர்ஹம்ஸ் தொகையை நாய் உரிமையாளர் சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டது.
சிறுமியின் உடல்நலம் கருதியும், பல்வேறு முறை மருத்துவமனைக்குச் சென்றதால் ஏற்பட்ட செலவுகளையும் கணக்கிட்டே இழப்பீடு கோரப்பட்டதாக சிறுமி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் முகமது அல் மன்சூரி தெரிவித்தார்.
