UAE Tamil Web

ஒருவர் மட்டுமே செல்லவேண்டும்; பேக் உபயோகிக்கத் தடை – டெலிவரி பணியாளர்களுக்கு RTA விதித்த புதிய கட்டுப்பாடுகள்..!

Delivery boy

துபாயில் டெலிவரி சேவைகளை வழங்கும் பணியாளர்களுக்கு புதிய விதிமுறைகளை துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது. இவற்றை பின்பற்றத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிவரி சேவை செய்யும் பணியாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விதிமுறைகள்

  • இந்த பணியை மேற்கொள்வோர் 21 வயதிற்கு குறைவானவராகவோ அல்லது 55 வயதைக் கடந்தவராகவோ இருத்தல் கூடாது.
  • மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாக வாகனங்களை இயக்கக்கூடாது.
  • மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் பணியாளர்கள் சாலையின் இடது லேனை பயன்படுத்துதல் கூடாது. Back Bag ஐ பயன்படுத்தக் கூடாது.
  • பைக்கில் பணியாளர் மட்டுமே செல்லவேண்டும். கூடுதலாக மற்றொருவரை ஏற்றிச்செல்லக் கூடாது.
  • சான்றளிக்கப்பட்ட தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை பார்க் செய்யவேண்டும்.
  • நல்ல நடத்தைக்கான சான்றிதழை காவல்துறையிடமிருந்து பெற்றிருக்கவேண்டும்.
  • பணியாளர்கள் உபயோகிக்கும் மோட்டார் சைக்கிள் தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கக்கூடாது.

மேற்கண்ட விதிமுறைகளை மீறினால் 700 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக விதிமுறை மீறலில் ஈடுபடுபவர்கள் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு

  • மழை, வெயில், தூசி, புகை மற்றும் பூச்சிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் உணவானது பத்திரமாக வைக்கப்பட்டிருக்கவேண்டும்.
  • உணவினை எடுத்துச்செல்லும் பெட்டியின் உள், வெளிப் பகுதிகள் மற்றும் கைகளால் தொடக்கூடிய இடங்களை துபாய் நகராட்சியின் ஒப்புதல் பெற்ற கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கவேண்டும்.
  • உணவின் வெப்பநிலையை தொடர்ந்து தக்கவைக்கவும் உணவுத் தரத்தை பாதுகாக்கவும் தகுந்த வெப்ப பாதுகாப்பு கருவிகளில் உணவானது வழங்கிடப்பட வேண்டும்.

துபாய் காவல்துறை மற்றும் நகராட்சி இணைந்து வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகளானது டெலிவரி சேவைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மட்டுமல்லாமல் பொருட்கள் மற்றும் சாதனங்களை டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.

“ஓட்டுனர்கள், சாலை உபயோகிப்பாளர்கள், கொண்டுசெல்லப்படும் உணவு அல்லது பொருட்களின் பாதுகாப்பை கணக்கில்கொண்டு” டெலிவரி பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றவேண்டும் என RTA தெரிவித்துள்ளது.

Delivery boy
1 Share
Share via
Copy link
Powered by Social Snap