துபாயின் ராஸ் அல் கோர் பகுதியில் அமைந்துள்ள கார் சந்தையில் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென தீ பரவியதால் அருகில் இருந்து 7க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது.
இந்த பயங்கர விபத்தில் லட்சக்கணக்கான திர்ஹம்ஸ் மதிப்பிலான 60 கார்கள் தீயில் எரிந்து சாம்பலாயின. அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியதால் அங்கிருந்த பொருட்களும் தீக்கிரையாயின. எனினும் யாருக்கும் எந்தவித உயிர் சேதமும் காயமும் ஏற்படவில்லை.
அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாத் அல் செபா, அல் குசைஸ், போர்ட் சயீத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
என்ன காரணம்?
இந்நிலையில் இந்த தீவிபத்து குறித்து துபாய் காவல்துறையின் தடய அறிவியல் மற்றும் குற்றவியல் பிரிவு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை காவல்துறையில் சமர்ப்பித்திருக்கின்றனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் மின் பகிர்மான யூனிட்டில் மின்சாரக் கசிவு ஏற்பட்டது தீ விபத்து ஏற்படக் காரணமாக அமைந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய தீயணைப்புப் பிரிவின் இயக்குனர் கேப்டன் முகமது சயீத் பின் அபித்,” கார்கள் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டதால் தீ உடனடியாக அடுத்தடுத்த கார்களுக்குப் பரவியிருக்கிறது” என்றார்.