பார்க்கிங் கட்டணத்தை தவிர்க்க போலி டிக்கெட்டா.?

fake parking ticket

கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக பார்க்கிங் டிக்கெட்டை மோசடி செய்ததாக துபாயில் வாழும் வெளிநாட்டவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொது வழக்கு பதிவின்படி, ஒரு செவிலியராக பணிபுரியும் 28 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஆண், தனது பணியிடத்தில் ‘பார்க்கிங் டிக்கெட்டை’ பிரிண்ட் செய்து பின்னர் அதை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வழங்கிய அதிகாரப்பூர்வ டிக்கெட் போலவே சொந்தமாக நகலெடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் வேறு ஒரு நபரும் இந்த மோசடியில் அவருக்கு உதவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆர்டிஏ-வின் ஒரு பார்க்கிங் இன்ஸ்பெக்டர் வழக்கறிஞரிடம் கூறுகையில், “நான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஜுமேராவின் அல் வாஸ்ல் சாலையில் ரோந்து மேற்கொள்ளும் போது பிரதிவாதியின் காரைக் கண்டேன். அதில் முன்னால் வைக்கப்பட்டிருந்த டிக்கெட்டை நான் சோதித்தேன். ஆனால் அதன் விவரங்கள் தெளிவாக இல்லை” என்றார்.

பின்னர் அந்த பார்க்கிங் இன்ஸ்பெக்டர், ஆர்டிஏவின் அனுமதிப் பிரிவை (RTA’s permits section) அழைத்தவுடன், பிரதிவாதியின் காரிலிருந்த டிக்கெட் காலாவதியானது என்றும் அவரின் காரை கட்டண மண்டலத்தில் (Paid Zone) நிறுத்த அனுமதி இல்லை என்பதையும் இன்ஸ்பெக்டர் அறிந்து கொண்டார். இதனால் சந்தேகமடைந்த பார்க்கிங் இன்ஸ்பெக்டர் போலீசை அழைத்துள்ளார்.

இதனால் பிரதிவாதி மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, பர் துபாய் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிக்கெட் போலியானது என்றும் அவர்களின் அலுவலகத்தால் வழங்கப்படவில்லை என்றும் RTA ஒரு கடிதம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை ஜனவரி 28 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Loading...