துபாயில் மனைவின் நடத்தைமீது சந்தேகம் கொண்ட கணவர் தனது மனைவியை பொதுப் பார்க்கிங் பகுதியில் கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சிறைவாசம் முடிந்தபிறகு அவர் நாடுகடத்தப்படவேண்டும் எனவும் துபாய் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக முதன்மை நீதிமன்றத்தில் அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு மீண்டும் விசாரணை செய்யப்பட்டதில் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்துள்ளது நீதிமன்றம்.
என்ன நடந்தது?
கொலை செய்யப்பட்ட பெண்ணை முதல்முறையாக கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தித்திருக்கிறார் குற்றவாளி. வீட்டு பணிப்பெண்ணாக வந்தவரை காதலித்துத் திருமணம் செய்திருக்கிறார்.
தன் நண்பர்கள் அந்தப்பெண்ணிற்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறியதாக விசாரணையில் குற்றவாளி தெரிவித்திருக்கிறார். இதனால் கணவன் – மனைவி இடையே அவ்வப்போது சண்டை நடந்துள்ளது.
கொலை நடந்த அன்று (2019, செப்டம்பர்) பெண்மணி வெளியே சென்றிருக்கிறார். அவருடைய போனிற்கு தொடர்புகொண்ட கணவன், உடனடியாக வீட்டிற்கு வரும்படிக் கூறியிருக்கிறார். ஆனால், பெண் அதற்குப் பதிலளிக்காமல் போனை வைத்திருக்கிறார்.
இதனால் நேரடியாகச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட கணவர், ஒருகட்டத்தில் கத்தியால் பெண்மணியை சரமாரியாகக் குத்தியிருக்கிறார். சம்பவம் அறிந்து காவல்துறை வந்தபோது, அந்தப்பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் என்கிறது விசாரணை குறிப்புகள்.
சம்பவ இடத்திலேயே அவருடைய உயிர் பிரிந்திருக்கிறது. தன்னை ஏமாற்றியதற்காக கோபம் தாளாமல் கொலை செய்ததாக இந்தியர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
10 ஆண்டுகள் சிறைத்தண்டனை முடிந்த உடன் அவர் நாடுகடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.