UAE Tamil Web

“இவரைப் பார்த்தால்.. நான் நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க” – இந்தியரின் வீடியோவை ஷேர் செய்து பாராட்டிய துபாய் ஆட்சியாளர்..!

indian

கேரளாவின் ஆழப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ரஷீத். இவர் தற்போது துபாயில் வசித்துவருகிறார். துபாயில் தேரா பகுதியில் இவரது தந்தை கடந்த 35 வருடங்களாக மளிகைப்பொருள் வியாபாரம் செய்துவருகிறார். தனது தந்தையுடன் இணைந்து தொழிலைக் கவனித்துவரும் ரஷீத், நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தான் தற்போது ஹாட் டாபிக்.

இவரது வீடியோவை அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ஷேர் செய்தது மட்டுமல்லாமல் உங்களை நினைத்துப் பெருமைகொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படி என்ன செய்தார்?

வழக்கம்போல தனது கடை வேலையில் ரஷீத் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது வெளியே கூச்சல் கேட்டிருக்கிறது. ஓடிச்சென்று பார்த்ததில் கர்ப்பிணிப்பூனை ஒன்று அவரது கடை இருந்த வளாகத்தின் மாடியில் விழுகும் தருவாயில் நின்றிருந்தது தெரியவந்திருக்கிறது.

துரிதமாக செயல்பட்ட ரஷீத் இரண்டு தொழிலாளர்கள் உதவியுடன் பெட்ஷீட்டை எடுத்து விரித்து, பூனைக்காக காத்திருக்க அந்நேரம் பார்த்து சரியாக பெட்ஷீட்டில் குதித்திருக்கிறது பூனை.

அடிக்கடி இந்தப் பூனைக்கு ரஷீத் பால் ஊற்றுவது வழக்கம். நேற்று எப்படி பூனை மேல்தளத்திற்கு சென்றது என்பது தெரியவில்லை எனச் சொல்லும் ரஷீத், நல்வேளையாக பூனைக்கு ஒன்றும் ஆகவில்லை என்றார்.

இந்த வீடியோவைத்தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரஷீத் வெளியிட, துபாய் ஆட்சியாளர் அதனை ஷேர் செய்து அதனுடன்,” இந்த அழகிய நகரத்தில் இப்படியான செயலை மேற்கொண்ட உங்களை நினைத்தால் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வெளியில் தெரியாத இந்த நாயகர்களைக் கண்டால் நான் நன்றி சொன்னேன் எனத் தெரிவியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது நண்பர் மூலமாக துபாய் ஆட்சியாளர் வீடியோவை பகிர்ந்த விஷயமறிந்த ரஷீத் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் தான் துபாய் ஆட்சியாளரின் மிகப்பெரிய ரசிகர் என்றும் தெரிவித்தார்.

indian
1 Share
Share via
Copy link