UAE Tamil Web

துபாய்: மளிகைப்பொருள் விற்பனையகத்தில் கத்திக்குத்து ; ஒருவர் பலி; பணத்தகராறு காரணமாக வெறிச்செயல்..!

HAND CUFF

துபாயில் நைஃப் காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஃபரீஜ் அல் மரார் பகுதியில் அமைந்துள்ள மளிகைக் கடை ஒன்றில் இன்று சூடானைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சக நாட்டைச் சேர்ந்தவரை கத்தியால் குத்திக் கொன்றிருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நைஃப் காவல்நிலைய இயக்குனர் பிரிகேடியர் தாரிக் தஹ்லக் இதுகுறித்துப் பேசுகையில்,” 38 வயதான அவர் காவல்துறையின் ரோந்துப் பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். விசாரணையில் பணத் தகராறு காரணமாக அவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்” என்றார்.

சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற அப்துல்லா அல் ஹோசானி மற்றும் அப்துல்லா அல் நூர்-தின் ஆகிய அதிகாரிகள் கத்தியுடன் நிற்கும் கொலையாளியைப் பார்த்திருக்கின்றனர்.

யாராவது அருகில் வந்தால் குத்திடுவேன் என குற்றவாளி மிரட்டும் போது, பொறுப்புடனும் துணிவுடனும் செயல்பட்ட அதிகாரிகள் அவனிடம் இருந்த ஆயுதத்தை பறித்து, கைகளை கட்டி வண்டியில் ஏற்றினர்.

அருகில் இருந்த நபர்கள் இதுபற்றிப் பேசுகையில் இருவரும் ஒரே நேரத்தில் கடைக்கு வந்ததாகவும், திடீரென பாதிக்கப்பட்டவர் அங்கிருந்து விலக, அவரைக் குற்றவாளி கத்தியால் குத்தியதாகவும் தெரிவித்தனர்.

குற்றவாளியை கைதுசெய்த அதே நேரத்தில், மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து காயமடைந்த நபருக்கு சிகிச்சை அளித்திருக்கின்றனர். ஆனாலும் ஆழமாக கத்திக் குத்து இருந்ததால் அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.

குற்றவாளிக்கு எதிராக பொதுவழக்குத்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. எதிர்பாராத இந்த தாக்குதல் சம்பவத்தில் அப்துல்லா அல் ஹோசானி மற்றும் அப்துல்லா அல் நூர்-தின் ஆகிய அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார் துபாய் காவல்துறை தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல்லா கலீபா அல் மர்ரி.