அமீரகத்தில் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் கடற்கரைக்கு வரும்போது அந்த குழந்தைகள் கடலில் நீந்தும்போதும் அல்லது கடற்கரையில் விளையாடும்போதும் அவர்களை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர் அதிகாரிகள்.
தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்து வருவதால், கோடை வெப்பத்தை தணிக்க, குறிப்பாக வார இறுதி நாட்களில், பல குடியிருப்பாளர்கள் கடற்கரைகளுக்கு தங்கள் குடும்பத்துடன் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதது.
இந்நிலையில் கடற்கரைக்குச் செல்வோரின் பாதுகாப்பு குறித்த புதிய சமூக ஊடகப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, குழந்தைகள் கடலுக்கு அருகில் செல்லும்போது அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உள்துறை அமைச்சகம் (MoI) எடுத்துரைத்துள்ளது.
குழந்தைகளை போதுமான அளவில் கண்காணிக்கத் தவறினால், அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்ள நேரிடும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீரில் மூழ்கும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக பெரியவர்களின் மேற்பார்வையின்றி குழந்தைகளை கடலுக்குள் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று அமைச்சகம் கூறியுள்ளது.
நீச்சலடிக்கும் போது குழந்தைகளை கவனித்துக்கொள்வது பெற்றோரின் பொறுப்பு என்று அதிகாரிகள் நினைவூட்டினர். “எப்பொழுதும் தங்கள் குழந்தைகளை நன்றாக கவனித்துக்கொள்வது பெற்றோர்களின் பொறுப்பு. குழந்தைகளுடன் கடற்கரையில் இருக்கும்போது பெற்றோர்கள் தொலைபேசிகள் அல்லது பிற விஷயங்களால் திசைதிரும்பக்கூடாது” என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.