லண்டன், பாலி மற்றும் ரோம் போன்ற விடுமுறை நாட்களை கழிக்கும் பிரபலமான சுற்றுலா இடங்களை பின்னுக்கு தள்ளி, துபாய் இந்தாண்டிற்கான மிகவும் பிரபலமான இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
டிரிபாட்வைசர் வெளியிட்டுள்ள பட்டியலில், துபாய் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து லண்டன் (இங்கிலாந்து), கான்கன் (மெக்சிகோ), பாலி (இந்தோனேசியா) மற்றும் கிரீட் (கிரீஸ்) ஆகியவை உள்ளன.
“துபாய் நவீன கலாச்சார வரலாற்றுடனும், உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குடன் கலக்கும் இடமாகும்” என்று டிரிபாட்வைசர் தெரிவித்துள்ளது.
“துபாய் ஓபராவில் ஒரு நிகழ்ச்சியைப் பாருங்கள். அதே போல், புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் இருந்து நகரத்தைப் பாருங்கள். துபாய் க்ரீக்கில் தங்கம், ஆடைகள் மற்றும் மசாலா பொருட்களை வாங்குவதில் உங்களது மதிய நேரத்தை செலவிடுங்கள். நீங்கள் சிலிர்ப்பைத் தேடுகிறீர்கள் என்றால், பாலைவனக் குன்றுகளுக்கு மேலே சூடான காற்று பலூனில் மிதக்கலாம். ஐஎம்ஜி வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சரில் அதிவேக சவாரி செய்யலாம் அல்லது பாம் ஜுமேரா மீது ஸ்கை டைவ் செய்யலாம்” என்று டிரிபாட்வைசர் சிலாகித்துள்ளது.
ரோம் (இத்தாலி), கபோ சான் லூகாஸ் (மெக்சிகோ), இஸ்தான்புல் (துருக்கி), பாரிஸ் (பிரான்ஸ்) மற்றும் ஹுர்காடா (எகிப்து) ஆகியவை இந்தாண்டு சுற்றுலா பயணிகளை கவரும் பிரபலமான இடங்களின் பட்டியலில் முதல் 10 இடத்தை பிடித்துள்ளது.
சுற்றுலா பயணிகளை கவரும் பிரபலமான இடங்களின் பட்டியலில் துபாய் மட்டும் இடம் பெறவில்லை. 22வது இடத்தை கத்தார் தலைநகர் தோஹா பெற்றுள்ளது.
துபாயின் சிறப்பு என்ன?
துபாயின் உயர் கொரோனா தடுப்பூசி விகிதங்கள் மற்றும் சமூக விலகல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக செயல்படுத்தப்படுகின்றன. அமீரகம் வழியாக எளிதாக இணைப்பது துபாயை பிரபலமான இடமாக மாற்றியுள்ளன.
கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் துபாய்க்கு சுமார் 50 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அக்டோபரில் மட்டும் சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை 10 லட்சத்தைத் தாண்டியது.
DXB – உலகின் பரபரப்பான விமான நிலையம்
கடந்த மாதம், துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) டிசம்பரில் உலகின் பரபரப்பான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதே போல், சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்து வருவதாக விமான ஆலோசனை நிறுவனம் OAG தெரிவித்துள்ளது.
அமீரகத்தில் சுற்றுலா சீசன் சமயத்தில், டிசம்பரில் துபாயின் சுற்றுலா பயணிகள் வருகை 15 சதவீதம் உயர்ந்து 35 லட்சத்தை கடந்திருந்தது.
100% திறன்
துபாய் இன்டர்நேஷனல் (DXB) டெர்மினல் 3 இல் கான்கோர்ஸ் A இன் இறுதிக் கட்டம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையம் 100 சதவீதம் செயல்பாட்டில் உள்ளது. அக்டோபரில் துபாய்க்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது, மேலும் DXB நவம்பரில் வாரத்திற்கு 1 மில்லியன் பயணிகள் என்ற பெரிய மைல்கல்லை எட்டியது.
அதிக இணைப்பு
துபாய் இன்டர்நேஷனல் 99 சதவீதத்தை எட்டியுள்ளது. 89 தேசிய மற்றும் சர்வதேச கேரியர்கள் மூலம் 90 நாடுகளுக்கு மேல் தங்கள் விமானங்களை இயக்குவதன் மூலம் 198 இடங்களுக்கு அதன் இடை-இணைப்பு நெட்வொர்க்கில் இலக்கு எட்டப்பட்டுள்ளது.