22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

டாக்ஸி மட்டுமல்ல, இதையும் நீங்கள் இயக்கலாம்.. பெண்களை கௌரவிக்கும் துபாய்..!

female-bus-driver

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் முக்கிய பிராந்தியமாக திகழும் துபாயில், பொது போக்குவரத்துக்கு பயன்பாட்டிற்கென விடப்பட்டுள்ள பேருந்துகளை இயக்க முதல் முறையாக பெண் ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து துபாயிலுள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (ஆர்டிஏ) திங்களன்று வெளியிட்டுள்ள தகவலில், துபாய் பிராந்தியதிற்குள்ளான பேருந்து சேவைகளுக்கு பயன்படுத்துவதெற்கென 3 பெண் பேருந்து ஓட்டுநர்கள் அடங்கிய முதல் குழுவை நியமித்துள்ளோம். மேலும் இந்த நடவடிக்கையால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இந்த முயற்சியை மேற்கொண்ட முதல் நிறுவனமாகவும் தாங்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ஆர்டிஏ-வில் ஒரு பெண் பள்ளி பேருந்து ஓட்டுநர் , 165 பெண் டாக்ஸி ஓட்டுநர்கள், 41 பெண் லிமோசைன் சொகுசு வாகன ஓட்டுனர்கள் ஏற்கனவே பணியில் உள்ளனர். தற்போது புதிதாக 3 பெண் பேருந்து ஓட்டுநர்கள் இந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த ஜூலை 3 முதல், வெவ்வேறு வழித்தடங்களில் பயணிகள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். ஆர்டிஏ-வின் இம்முயற்சி ஆண் ஓட்டுனர்களுடன் பெண் ஓட்டுனர்களை பணியமர்த்துவதற்கான சிறந்த உலகளாவிய நடைமுறைகளுடன் ஒன்றாக செல்கிறது. இந்நடவடிக்கை ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருகிறது. மேலும் பயணிகளுக்கு சிறந்த சேவைகளுடன் சமூகத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கான கலாச்சாரத்தை மேலும் ஊக்குவிக்கும் என்று ஆர்டிஏ-வின் பொது போக்குவரத்து அமைப்பு தலைமை நிர்வாக அதிகாரியான அகமத் ஹாஸிம் பஹ்ரோஸியன் கூறியுள்ளார் .

மேலும் அவர் பேசுகையில் முன்னோடி முயற்சிகளைத் தொடர எப்போதும் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அதனால் தான் பெண் பேருந்து ஓட்டுநர்களை பணியமர்த்துவதற்கான முன்னோடி முயற்சி எடுக்கப்படாத மத்திய கிழக்கு பிராந்தியத்தில் , பெண்களை மேம்பாடு மற்றும் பல வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு நிகராக பெண்களையும் ஈடுபடுத்துதல் என்ற எங்கள் கொள்கைக்கேற்ப இந்த நடவடிக்கையை எடுத்துளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

3 பெண் ஓட்டுனர்களை கொண்டு ஆர்டிஏ இயக்கும் பேருந்து வழித்தடங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

1. ரூட் 77 (Route 77) : பனியாஸ் (Baniyas), தேரா சிட்டி சென்டர் (Deira City Centre), துபாய் சர்வதேச விமான நிலைய முனையம் 1 மற்றும் முனையம் 3 (Dubai International Airport Terminal 1 and Terminal 3) ஆகிய இடங்களை இணைகிறது.

2. ரூட் F36 (Route F36) : இது மால் ஆஃப் தி எமிரேட்ஸ் (Mall of the Emirates) , துபாய் சயின்ஸ் பார்க் (Dubai Science Park) மற்றும் அல் பார்ஷா சவுத் (Al Barsha South) இடையே இயங்கும் மெட்ரோ இணைப்பு சேவையாகும்.

3. ரூட் F70 (Route F70) : இந்த வழித்தடமும் மெட்ரோ இணைப்பு சேவையாகும். புர்ஜுமன் (Burjuman), பர் துபாய் (Bur Dubai) மற்றும் அல் பஹிதி (Al Fahidi) இடையே இந்த பேருந்து சேவை இயக்கப்படுகிறது.

பெண் டாக்ஸி ஓட்டுநர்களுக்குப் பிறகு, துபாயில் பொது போக்குவரத்திற்கான பேருந்து சேவையில் பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.



error: Alert: Content is protected !!