UAE Tamil Web

கணவர் விட்டுச்சென்ற அதிர்ச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் – பச்சிளங்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு சென்ற சோகம் – குடும்பத்தை ஒன்றிணைத்த துபாய் போலீஸ்..!

dubai police

அல் முரக்காபாத் காவல்நிலையத்திற்கு சமீபத்தில் ஒரு போன்கால் வந்திருக்கிறது. அதில், அருகில் உள்ள பிளாட்டில் பச்சிளங்குழந்தை ஒன்று வெகுநேரமாக வீறிட்டு அழுவதாகவும், அதன் தாய் வெளியே சென்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற காவல்துறை மீட்புக்குழு குழந்தையை மீட்டு துபாய் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அறக்கட்டளையில் சேர்த்திருக்கிறது.

விட்டுச்சென்ற கணவன்

ஆசியாவைச் சேர்ந்த இந்த தம்பதி வெகுநாட்களாக துபாயில் வசித்து வந்திருக்கின்றனர். வேலை காரணமாக சொந்த நாட்டிற்குச் சென்றிருக்கிறார் இவருடைய கணவர். அதன்பிறகே கொரோனாவால் விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது.

இருப்பினும் தொலைபேசி வாயிலாக இருவரும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். ஒருநாள் திடீரென தனது கணவரிடம் இருந்து எவ்வித அழைப்பும் இல்லாமல் போகவே அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் பெண். எங்கிருக்கிறார்? எப்படியிருக்கிறார் என ஏதும் தெரியாமல் கைக்குழந்தையுடன் தவித்த இப்பெண்ணிற்கு இதுவே மனநிலை பாதிக்கக் காரணமாக அமைந்திருக்கிறது. இப்படியான சூழ்நிலையில் தான் குழந்தையை வீட்டில் தனியே விட்டுவிட்டு சாலையில் புலம்பியவாறே சுற்றித் திரிந்திருக்கிறார் இந்த தாய்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறை, உடனடியாக அமீரகத்தில் உள்ள பெண்ணின் நாட்டுடைய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து, அவருடைய கணவர் தற்போது எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறது. மேலும், அவரை அபராதம் ஏதும் இல்லாமல் துபாய் அழைத்துவரும் பணியிலும் இறங்கியிருக்கிறது.

இதனிடையே பெண்ணை அவரது குழந்தையுடன் சேர்த்திருக்கிறார்கள் காவல்துறையினர். இருவரும் தற்போது அறக்கட்டளையிலேயே பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய முரக்காபாத் காவல்நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் அலி கனிம்,” பிரிந்துபோன குடும்பத்தை நாங்கள் மீண்டும் ஒன்றிணைக்க இருக்கிறோம். அவரது கணவரை பத்திரமாக அழைத்துவந்து அந்தப் பெண்ணின் முன்பு நிறுத்தும் நாளுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

துபாய் காவல்துறையின் இந்த மனிதாபிமான செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர்.