UAE Tamil Web

வேலையிழந்ததால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – “வேலைக்கு நாங்க பொறுப்பு” இளைஞரைக் காப்பாற்றிய அமீரக காவல்துறை..!

Stock-Dubai-Police_

துபாய் அல் ரஷிதியா காவல்நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு போன்கால் வந்திருக்கிறது. படபடப்புடன் பேசியவரை அமைதியாக விஷயத்தைத் தெரிவியுங்கள் என அதிகாரி வலியுறுத்தவே,”எனது அண்டை வீட்டில் வசிப்பவர் தற்கொலை செய்ய இருக்கிறார். அவருடன் பணிபுரியும் நபர் அவருக்கு வேலை போகப்போகிறது எனச் சொல்லியிருக்கிறார். இதனால் மனமுடைந்த நபர், தனது கைகளை அறுத்துக்கொண்டார். இப்போது கட்டிடத்தின் மேல்தளத்தில் நின்றுகொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்த அடுத்த வினாடி, காவல்துறை அதிகாரிகள், ஆம்புலன்ஸ், மீட்புப்படை என 50 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றிருக்கிறது.

அல் ரஷிதியா காவல் நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் சயீத் அல் சுலைமான் இதுகுறித்துப் பேசுகையில்,” அல் வர்சான் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்துதான் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த எங்களது குழு அங்கே 27 வயது இளைஞர் ஒருவர் கட்டிடத்தின் மேல்தளத்தில் இருப்பது தெரியவந்தது. துபாய் காவல்துறையின் பயிற்றுவிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக்குழு அந்த இளைஞரிடம் தொடர்ந்து பேசி, அவரது முடிவை மாற்ற முயற்சித்தது. இதனிடையே அவருடைய முதலாளியைத் தொடர்புகொண்டு விஷயத்தைத் தெரிவித்த காவல்துறை, அவரையும் அந்த இளைஞரிடம் பேச வைத்தது” என்றார்.

“உங்களை வேலையை விட்டு நீக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை” என முதலாளி உறுதியளித்திருக்கிறார். அதற்குள் கட்டிடத்தின் கீழே மிகப்பெரிய வலை ஒன்று விரிக்கப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. சில மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில் மதுவின் மயக்கத்தில் இருந்த அவரை காவல்துறை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார். இதுகுறித்து பொது வழக்குத்துறை விசாரணை நடத்திவருகிறது.

தற்கொலை தீர்வல்ல

துபாயில் கடந்தாண்டு மட்டும் 2 தொழிலாளர்கள் பணப் பிரச்சினை காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தொழிலாளர்கள் துபாய் காவல்துறை, தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றிடம் தங்களது குறைகளை எடுத்துக்கூறி அவற்றை சரிசெய்ய வேண்டும் எனவும் தற்கொலை தீர்வாகாது எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Stock-Dubai-Police_
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap