UAE Tamil Web

பையனைக் காணாமல் துடித்த பெற்றோர் – 40 நிமிடத்தில் கண்டுபிடித்துக்கொடுத்த துபாய் காவல்துறை..!

boy

துபாயில் தனது பெற்றோருடன் வெளியே சென்றிருந்த நான்கு வயது சிறுவன் திடீரென காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த துபாய் காவல்துறை 40 நிமிடத்தில் சிறுவனை பத்திரமாக மீட்டுள்ளது.

- Advertisment -

இதுகுறித்து துபாய் காவல்துறையின் சுற்றுலா பிரிவு காவல்துறை இயக்குனர் கர்னல் முபாரக் அல் கெத்பி கூறுகையில், சிறுவன் உம் சுகீம் பகுதியில் காணாமல் போயுள்ளான். சிறுவன் ஸ்கேட்டிங் ஸ்கூட்டரில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அந்நேரம் சிறுவனது பெற்றோர் இரவு உணவு ஆர்டர் செய்து கொண்டு இருந்துள்ளனர். திடீரென சிறுவன் காணாமல் போனதை அறிந்த பெற்றோர் இது குறித்து பாதுகாப்புக்காக அருகில் இருந்த செக்யூரிட்டியிடம் தெரிவித்துள்ளனர். உடனே செக்யூரிட்டி காவல்துறையிடம் தகவல் தெரிவித்துள்ளார். கடற்கரையோரம் என்பதால் சிறுவனை காணாத பெற்றோர் மிகுந்த பயத்தில் இருந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துபாய் காவல்துறை சிறுவனை 40 நிமிடத்தில் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் காணாமல் போன இடத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் கண்டுபிடிக்கப்பட்டான் என்று அல் கெத்பி கூறினார்.

கண்டுபிடிக்கப்பட்ட சிறுவன் அழுதுகொண்டு, மிகுந்த பயத்தோடும், தாகத்தோடும், பசியோடும் மிகவும் சோர்ந்துபோய் காணப்பட்டுள்ளான்.

விரைவாக சிறுவனை மீட்ட காவல்துறைக்கு சிறுவனின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அத்தோடு சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை சுற்றுலா பிரிவு காவல்துறை இயக்குனர் கர்னல் முபாரக் அல் கெத்பி மனமார பாராட்டினார்.

குழந்தைகள் மீது எப்பொழுதும் கவனமாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது கவனக் குறைவுடன் இருக்கவேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.