UAE Tamil Web

கழிவு நீர் குழாய்க்குள் மிதந்த எலும்புகள் – மிரண்டுபோன அதிகாரிகள்..!

drainage

துபாயில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் இருந்து காவல்துறைக்கு செய்யப்பட்ட போன் காலில், நிறுவனத்திற்குச் சொந்தமான கழிவுநீர் குழாயில் (Man Hole) இருந்து கடுமையான துர்நாற்றம் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து துபாய் காவல்துறையின் குற்றவியல் பிரிவில் பணியாற்றும் ஆழமான நீர்ப்பகுதி மீட்புப்படை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. கழிவு நீர் குழாய்க்குள் மனித எலும்புகள் மிதப்பதை மீட்புப்படையினர் கண்டதும் திடுக்கிட்டனர்.

இம்மாதிரியான சூழலில் பணியாற்றும் திறமை வாய்ந்த இவ்வீரர்கள் குழாயின் அடிப்பாகத்தில் சேறுடன் இருந்த அழுகிய உடலை வெளியே எடுத்துவந்தனர். உடலின் பாகங்களில் இருந்து DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டன.

காணாமல் போன தொழிலாளி

இதே நிறுவனத்தில் இருந்து ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் காணாமல் போனதாக காவல்துறையிடம் ஏற்கனவே புகாரளிக்கப்பட்டிருந்திருக்கிறது. இறந்தவர், காணாமல் போனவர்தானா? என்பதை அறிய நடத்தப்பட்ட DNA ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உண்மை வெளிவந்திருக்கிறது.

கழிவு நீர் குழாயில் இருந்த அடைப்பை சரி செய்ய சூப்பர்வைசரிடம் அனுமதி கோராமல், அந்த ஊழியர் உள்ளே சென்றிருக்கிறார். குழாயின் உள்ளே இருந்த நச்சுவாயு தாக்கியதில் மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழந்திருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் தடய அறிவியல் மற்றும் குற்றவியல் பிரிவின் கீழ் உள்ள தடயவியல் புகைப்பட குற்றப்பிரிவின் இயக்குனர் மேஜர் ரஷீத் பின் ஹசீம் (Rashid Bin Hazeem),” காணாமல் போன தொழிலாளி தான் உயிரிழந்திருக்கிறார் என்பது DNA சோதனை மூலம் உறுதியானது. மரணத்திற்கு நச்சு வாயுக்கள் காரணமாக அமைந்திருக்கின்றன. இந்த சம்பவத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெற்றிருப்பதற்கான முகாந்திரங்கள் இல்லை. ஆழமான நீர்ப்பகுதியில், பார்க்க முடியாத இடங்களில் சிக்கியிருக்கும் உடல்களை நச்சுக்காற்று இருக்கும் நிலையிலும் மீட்கும் திறன் இந்த வீரர்களுக்கு உண்டு” என்றார்.

drainage
0 Shares
Share via
Copy link