துபாயில் சிறுமி ஒருவர் சமூக வலைத்தளம் மூலமாக அறிமுகமான நபர் ஒருவரிடம் கடந்த சில காலமாக பேசிவந்திருக்கிறார். நல்லவர் போல நடித்த அந்த ஆசாமி, சிறுமியின் புகைப்படங்களைக் கேட்க, சிறுமியும் அனுப்பியிருக்கிறார். இதில் சில அந்தரங்க புகைப்படங்களும் அடக்கம்.
இந்நிலையில் தனது இச்சைக்கு இணங்கவேண்டும் எனவும் மறுத்தால் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் எனவும் அந்த ஆசாமி மிரட்ட, பயந்துபோன சிறுமி விஷயத்தை பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
துபாய் காவல்துறையின் ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன் அப்ளிகேஷன் மூலமாக சிறுமியின் பெற்றோர் புகாரளிக்க, அடுத்த 24 மணிநேரத்தில் காவல்துறை குற்றவாளியை கைது செய்திருக்கிறது.
இதுகுறித்துப் பேசிய புர் துபாய் காவல் நிலையத்தின் இயக்குனர் பிரிகேடியர் அப்துல்லா பின் சரூர்,” இந்த வழக்கின் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆரம்பத்தில் கண்ணியமாக நடந்து பின்னர் சிறுமியை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறார் குற்றவாளி. குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களது நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் உடனடியாக அவர்களிடம் இதுகுறித்துப் பேச வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் தயங்காமல் காவல்துறையின் உதவியை நாடவேண்டும். மக்களுக்கு உதவவே காவல்துறை இருக்கிறது என்பதை மக்கள் நினைவில்கொள்ள வேண்டும்” என்றார்.
