UAE Tamil Web

அமீரக குடியுரிமை வாங்கித் தருவதாக பணம் பறித்த அலுவலகத்தை இழுத்து மூடிய அதிகாரிகள்..!

close

துபாயில் குடியுரிமை பெற்று தருவதாக கூறி விண்ணப்பத்தாரர்களை ஏமாற்றிய இமிகிரேஷன் சர்வீஸ் அலுவலகம் (immigration service office) ஒன்றை துபாய் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

- Advertisment -

இந்த நிறுவனம் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்ததும், குடியுரிமை பெற்று தருவதற்கான அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என்றும் துபாய் பொருளாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த துபாய் பொருளாதாரத் துறையின் விசாரணையில், அமீரக குடியுரிமை பெற விண்ணப்பித்தவர்களுக்கு கண்டிப்பாக குடியுரிமை பெற்றுத் தருவதாக இந்த அலுவலகம் உறுதி அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த அவர்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் சொத்து மதிப்பு பற்றிய விவரங்களை இந்த அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு விண்ணப்பத்தாரர்கள் குடியுரிமை பெற தகுதியானவர்களா என்பது தீர்மானிக்கப்படும் என்று போலியான வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர்.

100 மில்லியன் திர்ஹம்ஸ் சொத்துக்கள் இருக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு குடியுரிமை பெற்று தருவதற்கு கட்டணமாக 10,000 டாலர் செலுத்துமாறு கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி விண்ணப்பதாரர் வழங்கிய விவரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் போலியான நம்பிக்கையை தெரிவித்துள்ளது.

இவ்வாறு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் வழங்கும் இச்சேவையானது அங்கீகரிக்கப்படாதது அதுமட்டுமின்றி தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரக குடியுரிமை சட்டத்தின்படி முரண்பாடாக உள்ளது. அதாவது குடியுரிமை பெற்று தருவதற்கான செயலாக்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அதற்கு மாறாக இந்த நிறுவனம் கட்டணம் வசூலித்துள்ளது.

2021 ஜனவரியில் மாற்றியமைக்கப்பட்ட குடியுரிமைக்கான சட்ட திருத்தத்தின்படி முதலீட்டாளர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் குடியுரிமை பெறுவதற்கு தகுதியானவர்கள் என்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை, உள்ளூர் எமிரி, ரூலர்ஸ் கோர்ட்ஸ், மற்றும் 7 அமீரகங்களின் நிர்வாக சபை கூறியுள்ளது. எனவே பொது மக்கள் இது மாதிரி போலியான நிறுவனங்களை நம்பி பணத்தை செலுத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் மற்றும் குடியுரிமை பெற விரும்புபவர்கள் இதுபோன்ற மோசடி கும்பலிடமிருந்து பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று துபாய் பொருளாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

மேலும் இது சம்மந்தப்பட்ட புகார்களை தெரிவிக்க துபாய் கன்ஸ்யூமர் ஆப் மூலமாகவோ,  Consumerrights.ae என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது 600545555 என்ற எண்ணின் மூலமாகவோ புகாரை பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.