கொரோனா தொற்று கண்ணுக்குத் தெரியாத கிருமி என்பதால் அதனிடம் இருந்த நம்மை தற்காத்துக் கொள்ள முகக்கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகிறோம். கதவு, லிஃப்ட் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள பொருட்களில் கிருமி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் துபாய் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி அசத்தியுள்ளனர். துபாயின் அழ்மினாரில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வரும் மர்யம் அல்லாவி, முஹம்மத் இப்ராஹிம், முஹம்மத் சயான், யூசுஃப் மஹ்ஃபூஸ், செயின் நயீம் ஆகிய ஐவர் அடங்கிய குழு, கெமிக்கல் முறையில் இயங்கும் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

கதவுகளின் கைப்பிடியைச் சுற்றி கிளாஸ் பைப்பை வைத்து அதில் இருந்து கெமிக்கல் திரவத்தை வெளியாகச் செய்து தானியங்கி முறையில் கதவின் கைப்பிடியில் கிருமிகள் தங்காதவாறு சுத்தம் செய்ய முடியும். இதேபோல கருவி பொறுத்தப்பட்டுள்ள கதவு வழியாகச் செல்வோரின் உடல் வெப்பநிலையையும் அறிந்து கொள்ளலாம். குறைந்த செலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் கண்னுக்குத் தெரியாத கிருமிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்கிறது மாணவர்கள் குழு. இந்த அறிய கண்டுபிடிப்பில் மேலும் பல நுட்பங்களை புகுத்தி Global Innovation Challenge போட்டியில் பங்கேற்க மாணவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
