துபாயில் வசித்துவரும் ஆசியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் துபாய் காவல்துறைக்கு ஒரு வித்தியாசமான கோரிக்கையை வைத்திருக்கிறார். சில குடும்ப சிக்கல்கள் காரணமாக தன்னுடைய மனைவி மற்றும் மகளை 10 வருடங்களுக்கும் மேலாக சந்திக்க முடியாமல் தவிக்கும் அந்நபர், அவரது மனைவி மற்றும் மகள் துபாய் விமான நிலையம் வழியாக பயணிக்கும் விபரத்தை அறிந்திருக்கிறார்.
தன்னுடைய குடும்பத்தை சந்திக்க உதவி செய்யும்படி துபாய் காவல்துறையிடம் கேட்க, போலீஸாரும் ஓகே சொல்லியிருக்கிறார்கள். துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டிரான்சிட் பகுதியில் மூவரும் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறது காவல்துறை.
தனது தந்தையைக் கண்டதும் ஓடிச்சென்று அவரது மகள் கட்டியணைத்துக்கொள்ள இதனைப்பார்த்த அனைவரும் நெகிழ்ச்சியடைந்தார்கள்.
இதுகுறித்து அந்நபர்,” உலகின் மிக மகிழ்ச்சியான தந்தையாக என்னை உணரவைத்த துபாய் காவல்துறைக்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்துப் பேசிய விமான நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவு இயக்குனர் மேஜர் ஜெனரல் அலி அதீக் பின் லாஹேஷ்,” தனிப்பட்ட காரணங்களால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய குடும்பத்தைப் பிரிந்து வாடுவதாக ஆசிய நபர் குறிப்பிட்டார். ஆகவே, அவர்களை சந்திக்கவைக்க நாங்கள் ஏற்பாடு செய்தோம்” என்றார்.
