UAE Tamil Web

இதல்லவா சாதனை – புற்றுநோய் பாதிக்கப்பட்டோருக்கு அதிகமுறை முடியை தானமாக வழங்கி இந்திய மாணவி சாதனை!

துபாயில் உள்ள இந்திய பள்ளி மாணவியான 14 வயது ஆலியா ருமானா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக முறை முடி தானம் செய்து இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். 2016 முதல் இதுவரை 4 முறை முடிதானம் செய்த ருமானா ஒவ்வொரு முறையும் 12 இன்ச் முடியை தானமாக அளித்துள்ளார். ருமானாவின் சேவையை பாராட்டி அவருக்கு இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து பேசிய ருமானா, புற்றுநோய் பாதிப்பு குறித்து தனது பள்ளியில் அளித்த விழிப்புணர்வே இதுபோன்ற செயலில் ஈடுபட தன்னை உந்தியதாக தெரிவித்துள்ளார். தனது பெற்றோர் தொடர்ந்து பல சேவைகள் செய்து வருவதாகவும் தானும் அதில் ஈடுபடுத்திக் கொள்ளவே முடிதானம் செய்து வருவதாக கூறியுள்ளார். முடி தானம் செய்வதன் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரை சிறிதளவேனும் மகிழ்ச்சிப்படுத்த தனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் ஆலியா ருமானா குறிப்பிட்டுள்ளார். முடியை தானம் செய்வதால் பெண்களுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படாது என்றும் நோயாளிகளின் நலன் கருதி முடிதானம் செய்ய பலரும் முன் வர வேண்டும் என்றும் ஆலியா ருமானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Shares
Share via
Copy link