UAE Tamil Web

துபாய்க்கு வரும் அதிவேக கேப்லைன் போக்குவரத்து சேவை – டிராவல் இனி ஜாலிதான்..!

CABLINE

நகரப் போக்குவரத்தை மேம்படுத்தும் விதமாக அதிவேக கேப்லைன் சேவையை வழங்க இருப்பதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.

இந்த துறையில் பிரசித்திபெற்ற பிரான்ஸைச் சேர்ந்த MND நிறுவனத்துடன் இதற்காக RTA ஒப்பந்தம் ஒன்றினை கையெழுத்திட்டுள்ளது. MND ஆல் உருவாக்கப்பட்ட கேப்லைன் அமைப்பு வான்வழி போக்குவரத்திற்கு “முற்றிலும் புதிய அனுபவத்தை” வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் ஏற்கனவே உள்ள இடைநிலை போக்குவரத்து மையங்களை இந்த கேப்லைன் ஒருங்கிணைக்க இருக்கிறது. டிரைவர் இல்லாத இந்த வான்வெளி நகரும் பெட்டிகள் மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்ச உட்கட்டமைப்பு, எளிதான போக்குவரத்து மைய ஒருங்கிணைப்பு மற்றும் குறைவான பராமரிப்புத் தேவை ஆகியவை இந்த சிறப்பம்சமாகும். நகரத்தில் தேவைப்படும் அதிக எண்ணிக்கையிலான சேவைகள் மற்றும் பயணிகளுக்கான நிறைவான சேவையை இவை நிச்சயம் அளிக்கவல்லது.

2030 ஆம் ஆண்டிற்குள் துபாயில் உள்ள போக்குவரத்து சேவைகளில் 25% ஐ டிரைவர் இல்லாத அமைப்பாக மாற்றும் துபாய் அரசின் திட்டத்தின் ஒருபகுதியாக இது கருதப்படுகிறது.

இதுகுறித்துப் பேசிய ரயில் ஏஜென்சியின் தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் மொஹ்சின் இப்ராஹீம் யூனிஸ்,” பொதுப் போக்குவரத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதே எங்களது நோக்கமாகும். ரோப் வழி போக்குவரத்துத் துறையில் MND காலங்காலமாக இயங்கிவருகிறது. அது தற்போது டிரைவர் இல்லாத அதிவேக சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை எளிதானது, ஆற்றலை சேமிக்கக்கூடியது மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகக்குறைவான அளவில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதன் தனிச்சிறப்பு” என்றார்.

MND நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சேவியர் காலட் லவேல்லி இதுபற்றிப் பேசுகையில்,” பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதியில் நடைபெற்றுவரும் எங்களுடைய இந்தப் புதிய அமைப்பின் பயிற்சிகள் நிறைவைத் தருகின்றன. இந்த அதிநவீன தொழில்நுட்பம் மூலமாக நகரத்தில் உள்ள போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யலாம் என தீர்க்கமாக நம்புகிறோம்” என்றார்.

CABLINE
8 Shares
Share via
Copy link