UAE Tamil Web

துபாயில் மேலும் 10 பள்ளிகள் துவக்கம் : பெற்றோர்கள் மகிழ்ச்சி..!

school

துபாய்: புதிய கல்வியாண்டில் புதிதாக 10 தனியார் பள்ளிகள் துவங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாயின் கல்வித்துறை ஒழுங்குமுறை அமைப்பான அறிவு மற்றும் மனிதவள மேம்பாட்டு ஆணையம் (KHDA) இதுகுறித்து இன்று சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

இந்தப் புதிய பள்ளிகளின் வருகையினால் 14,671 இடங்கள் கூடுதலாக உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

KHDA வின் அனுமதி வழங்கல் மற்றும் உடன்பாட்டுப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது தார்விஷ் இதுகுறித்துப் பேசுகையில்,” புதிதாக 10 பள்ளிகள் அமைவது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதன்மூலமாக பெற்றோருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்” என்றார்.

இப்புதிய பள்ளிகள் திலால் அல் காஃப், அல் வர்கா, அல் கராமா, அல் பர்ஷா, சிட்டி வாக், மிர்திஃப், நாத் அல் ஷெபா, அல் கவானீஜ் மற்றும் ரஷீதியா ஆகிய இடங்களில் அமைய இருக்கின்றன. இப்பள்ளிகள் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐபி பாடத்திட்டங்களின் அடிப்படையில் இயங்க இருக்கிறார்கள்.

இந்த ஆண்டு துபாயில் முதல் ஆஸ்திரேலிய பாடத்திட்ட பள்ளி திறக்கப்பட இருக்கிறது. கூடுதலாக, பிரிட்டனின் மதிப்புமிக்க 500 ஆண்டுகள் பழமையான ராயல் கிராமர் பள்ளி கில்ட்ஃபோர்டின் முதல் துபாய் வளாகம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் துபாயில் உள்ள மொத்த சர்வதேச கிளை பள்ளிகளின் எண்ணிக்கையை ஏழாகக் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று ஆண்டுகளில் துபாயில் மொத்தம் 25 புதிய தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2020 மற்றும் பிப்ரவரி 2021 க்கு இடையில், பள்ளி சேர்க்கையில் துபாய் 2.6 சதவீத ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கண்டுள்ளதாக பிப்ரவரி 2021 இல் KHDA வெளியிட்ட சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“துபாயின் நோக்கமான உயர்தர பள்ளிகளை அமைக்கும் பணியின் பிரதிபலிப்பே புதிய பள்ளிகளை அமைக்க அனுமதி கோரப்படுவதை காட்டுகிறது” என தார்விஷ் தெரிவித்தார்.