UAE Tamil Web

ஜூன் 1 ஆம் தேதிமுதல் துபாயில் 5 புதிய பேருந்து வழித்தடங்கள் அறிமுகம் – RTA அறிவிப்பு..!

RTA-bus-

துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து 5 புதிய பேருந்து வழித்தடங்களைத் திறப்பதாக அறிவித்துள்ளது. உட்புறச் சாலைகளில் பயணிக்கும் மக்களின் நலனுக்காவும் உட்புறப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த முடிவை எடுத்திருப்பதாக RTA அறிவித்துள்ளது. இனி இந்தப் புதிய பேருந்து வழித்தடங்களைப் பார்ப்போம்.

ரூட் 14 : ஔத் மேதா பேருந்து நிலையத்திலிருந்து அல் சஃபா பேருந்து நிலையத்திற்கு ஒவ்வொரு 20 நிமிடங்களும் பேருந்து இயக்கப்படும்.

ரூட் 23 : ஔத் மேதா பேருந்து நிலையத்திலிருந்து அல் நஹ்தா 1 பேருந்து நிலையத்திற்கு ஒவ்வொரு 30 நிமிடங்களும் பேருந்து இயக்கப்படும்.

ரூட் 26 : ஔத் மேதா பேருந்து நிலையத்திலிருந்து பிசினஸ் பே பேருந்து நிலையம் 2 ற்கு வார நாட்களில் பீக் டைம் எனப்படும் முக்கிய போக்குவரத்து நேரத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களும் பேருந்து இயக்கப்படும். வெள்ளிக்கிழமை இச்சேவை கிடையாது.

ரூட் F50 : மெட்ரோ இணைப்பு சேவையான இந்த ரூட், துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் மெட்ரோ ஸ்டேஷனையும் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் காம்ப்ளக்ஸ் 2 ஐயும் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் ஒரு பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூட் F51 : மெட்ரோ இணைப்பு சேவையான இந்த ரூட், துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் மெட்ரோ ஸ்டேஷனையும் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் காம்ப்ளக்ஸ் 1 ஐயும் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி இரண்டு வழித்தடங்களும் மத்திய தொழில் மாவட்டங்களான தேரா மற்றும் புர் துபாய்க்கு சேவையை வழங்க இருக்கின்றன. இப்பகுதியில் உருவாகிவரும் போக்குவரத்திற்கான தேவையை அறிந்தே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவைதவிர்த்து, மேலும் சில வழித்தடங்களை RTA மேம்படுத்த/நீட்டிப்பதாக இருப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி வர்சானில் இருக்கும் ஃப்ளை துபாய் தலைமை அலுவலகம் வரையில் ரூட் 20 ஐ நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. F09 வழித்தடம் சுழல் பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அல் வாசில் பார்க் பகுதிக்கு சேவை வழங்கப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

F14, F19A மற்றும் F19B ஆகிய ரூட்கள் பிசினஸ் பே 2 பேருந்துநிலையம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. பீக் நேரங்கள் தவிர்த்து பிற நேரங்களில் X23 ரூட்டில் சேவை வழங்கப்படும். பரபரப்பான நேரங்களில் போக்குவரத்துத் தேவையை மேம்படுத்த மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாக RTA அறிவித்துள்ளது.

அதே தேதியில் 28 வழித்தடங்களின் பயண நேரங்களை மாற்றியுள்ளது RTA. மாற்றப்பட்ட பயண நேரங்களைக் கொண்ட வழித்தடங்கள் பின்வருமாறு: 20, 61D, 66, 91, 91A, 95, C03, C05, C18, E303, E306, E307, E307A, F03, F09, F14, F19A, F19B, F49, F50, F51, F55, F61, F70, X23, X25, X92, மற்றும் X94.

மேலும் C14 வழித்தடம் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தைப் பயன்படுத்தியவர்கள் 14 மற்றும் 23 ஆகிய மாற்று வழித்தடங்களைப் பயன்படுத்துமாறு RTA வலியுறுத்தியுள்ளது.

மெட்ரோ, ட்ராம் மற்றும் கடல் போக்குவரத்து உள்ளிட்டவற்றோடு பேருந்து சேவையை இணைத்து தரம் உயர்த்த RTA முடிவெடுத்துள்ளது. அதாவது, பெருகிவரும் போக்குவரத்துத் தேவைக்கு ஏற்றபடி போக்குவரத்து அமைப்பையும் சீர்படுத்தும் பணிகளில் RTA இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTA-bus-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap