துபாயில் பேருந்துகளை அதிக திறனுடன் பயன்படுத்தவும் பேருந்துக்கான காத்திருப்பு நேரத்தினைக் குறைக்கவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்த இருக்கிறது.
துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அலிபாபா கிளவுட் உடன் இணைந்து நகர்ப்புறங்களில் போக்குவரத்தை நிர்வகிக்க ‘சிட்டி பிரைன்’ (City Brain) முறையை சோதனை செய்தது. இந்த அமைப்பு நோல் கார்டுகள், பேருந்துகள், டாக்சிகள் மற்றும் நிறுவன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பெறப்பட்ட பெரிய தரவை (Big Data) பகுப்பாய்வு செய்கிறது.
இந்த தரவு பின்னர் பஸ் கால அட்டவணைகள் மற்றும் பாதைகளை மேம்படுத்த பயன்படுகிறது. இந்த அமைப்பு பஸ் பயணத்தை 17 சதவீதம் அதிகரிக்கும் என்றும் சராசரி காத்திருப்பு நேரத்தை 10 சதவீதம் குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது திட்டம்
இந்த இரண்டாவது திட்டம் என்பது அல் கூஸ் பஸ் டிப்போவில் உள்ள தொலைநிலை பஸ் செயல்திறன் கண்காணிப்பு மையமாகும். ‘டெலிமாடிக்ஸ்’அமைப்புடன் பொருத்தப்பட்ட RTA-வின் புதிய 516 வோல்வோ பேருந்துகளின் செயல்திறனை இது கண்காணிக்கிறது.
செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு செயல்முறைகளை மேம்படுத்தும் இந்த அமைப்பில், இயந்திர அம்சங்களை உள்ளடக்கிய 47 வகையான அலெர்ட் வசதிகள் உள்ளன. கிலோமீட்டருக்கு செலவாகும் எரிபொருளின் அளவு, வாகனத்தின் உள்ள பாதுகாப்பு கருவிகளின் நிலை குறித்து இந்த அமைப்பு அவ்வப்போது தகவல்களை அளிக்கும்.
இதன்மூலம் எரிபொருள் பயன்பாட்டை 5 சதவிகிதம் குறைக்கலாம் மற்றும் பேருந்துகளின் பராமரிப்பு நேரத்தை சரியான நேரத்தில் திட்டமிடலாம்.
RTA வின் இயக்குநர் ஜெனரல் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் மட்டார் அல் முகமது தயேர் இதுகுறித்துப் பேசுகையில்,” கொரோனாவுக்கு முந்தைய அளவைப்போல 70 சதவீத போக்குவரத்தை எட்டியுள்ளோம். சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த முயற்சிகள் பயணித்த கிலோமீட்டர்களின் எண்ணிக்கையை 18 சதவீதம் குறைத்தல் ; பஸ் நேர வருகையை 6 சதவீதம் மேம்படுத்துதல்; கார்பன் உமிழ்வை 34 மெட்ரிக் டன்களாக குறைத்தல் ஆகியவற்றை எட்ட உதவி செய்திருக்கிறது” என்றார்.
