UAE Tamil Web

பணம் படுத்தும்பாடு : கைநிறைய காசுபார்க்க இளைஞர் செய்த வேலை – கையும் களவுமாகப் பிடித்த காவல்துறை..!

cops

துபாயில் வளைகுடா நாட்டைச் சேர்ந்த 21 வயது இளைஞன் பணத்திற்காக போதைப் பொருள் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து துபாய் போலீசார் அவனை கைது செய்து துபாய் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் போலீஸ்காரர் ஒருவர் பெட்ரோல் ஸ்டேஷனில் இருக்கும் ஒரு உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குழுவாக அமர்ந்து இருப்பதை கவனித்துள்ளார்.

உடனே அந்த போலீஸ்காரர் அவர்களிடம் சென்று தன்னை ஒரு போலீஸ் என்று அடையாளப்படுத்திவிட்டு, அந்த குழுவில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரண்பாடாக பேசியுள்ளான். அவன் பேசும் விதத்திலேயே அவன் போதைப்பொருள் உட்கொண்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட போலீஸ்காரர், அவனை சோதனை செய்து பார்த்ததில் அவனிடமிருந்த பை ஒன்றில் ஏற்கனவே பயன்படுத்திய போதை ஊசி ஒன்று இருந்துள்ளது. அவனுடனிருந்த மற்றவர்களையும் விசாரித்ததில் அவர்களும் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்கள் நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

நீதிமன்ற விசாரணையில் 21 வயது இளைஞன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, பணத்திற்கு ஆசைப்பட்டு மற்றொரு நபர் ஒருவரின் வாகனத்தில் வைத்து போதை பொருளை விற்பனை செய்ததாக கூறினான். குற்றம் நிறுபணமானதையடுத்து அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.