39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

நீச்சல் குளத்தில் சிக்கி தவித்த 3 வயது குழந்தை..! 2 மணி நேரத்திற்கும் மேல் போராடிய துபாய் காவல்துறை

swimming

நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் வடிகால் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த உறிஞ்சும் குழாயில்(suction pipe) 3 வயது சிறுவன் மாட்டி கொண்ட சம்பவம் துபாயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இது பற்றி தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள் துபாய் அல் அய்ன் சாலையில் உள்ள, அவர்களது வீட்டு நீச்சல் குளத்தில் இருந்த போது அந்த 3 வயது சிறுவன், குளத்தின் அடிப்பகுதியில் இருந்த வடிகால் மூடியை திறந்துள்ளான்.

அப்போது எதிர்பாராவிதமாக வடிகால் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த உறிஞ்சு குழாயில் சிறுவனின் ஒரு கை சிக்கி கொண்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்துள்ள துபாய் காவல்துறையின் கடல்சார் மீட்பு இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அலி அல் நக்பி, சிறுவனின் பெற்றோரிடமிருந்து வந்த அவசர அழைப்பை தொடர்ந்து தங்கள் துறையின் மீட்பு குழு, அல் அய்ன் சாலையில் அமைந்துள்ள சிறுவனின் வில்லாவிற்கு விரைந்து சென்றதாக கூறினார்.

வலியால் அழுத குழந்தை..

மீட்பு குழு சம்பவ இடத்திற்கு செல்வதற்கு முன்னதாக நீச்சல் குளத்தில் சிக்கிய குழந்தையை மீட்க பெற்றோர் முயன்றனர், ஆனால் நீர் அழுத்தம் காரணமாக அவர்களால் மீட்க முடியவில்லை. மேலும் தனது கை உறிஞ்சு குழாயில் சிக்கி உறிஞ்சப்பட்டதால் குழந்தை வலி தாங்காமல் அழுதுள்ளது.

baby

உயிருக்கு ஆபத்தில்லை..

சரியான நேரத்தில் சம்பவ இடத்திற்கு ஒரு துணை மருத்துவர் வந்திருந்தார். சிறுவனின் வீட்டிற்கு சென்ற பின்னர் அவனின் நிலை குறித்து விரைவாக ஆராய்ந்த அதிகாரிகள், குழந்தையின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை உறுதிப்படுத்தினர். இந்த விஷயத்தை சொல்லி பெற்றோரை அமைதிப்படுத்தினர்.

கைகளால் காலியாக்கப்பட்ட குளம்..

அதே போல நீர் அழுத்தம் காரணமாக உறிஞ்சு குழாயில் சிக்கிய குழந்தையின் கையை பிரித்தெடுப்பது கடினம் என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர். எனவே உடனடியாக நீரின் அழுத்தத்தை குறைக்க மற்றும் மின்சாரத்தை துண்டிக்க குளத்திலிருந்து தண்ணீரை அகற்றத் தொடங்கினர். வாளிகள் மற்றும் ஒரு சிறப்பு வடிகால் சாதனத்தை பயன்படுத்தி, நீச்சல் குளத்தில் இருந்த நீரை மீட்பு குழுவினர் கைகளாலேயே அகற்றியுள்ளனர். இந்த நடவடிக்கை சுமார் 2 மணி நேரம் நீடித்ததாக அதிகாரி அலி அல் நக்பி குறிப்பிட்டுள்ளார்.

போராடி மீட்ட மீட்பு குழு

நீச்சல் குளத்திலிருந்து நீரை காலி செய்த பிறகு பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் வடிகால் அடிப்பகுதியில் ஒரு துளை உருவாக்கி குழந்தையை மீட்கும் முயற்சி நடைபெற்றது. காற்று அழுத்தத்தை சமப்படுத்தவும், சிறுவனை மீட்கவும் சிக்கியிருந்த குழந்தையின் கையை சுற்றியிருந்த நீச்சல் குளத்தின் அடிப்பகுதியில் உள்ள கான்கிரீட்டை உடைக்கவும், துபாய் காவல்துறை சிறப்பு கருவிகளைப் பயன்படுத்தினர். இறுதியாக அந்த 3 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான் என்று அவர் கூறினார்.

பாராட்டு..

நீச்சல் குளத்திலிருந்த நீரை இயந்திரம் ஏதுமின்றி கைகளாலேயே காலி செய்ய 2 மணி நேரம் உழைத்து, குழந்தைக்கு காயம் ஏற்படாமல் மீட்பு திட்டத்தை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு லெப்டினன்ட் கர்னல் அலி அல் நக்பி பாராட்டு தெரிவித்துள்ளார். நீச்சல் குளங்களில் இறக்கி விடப்படும் குழந்தைகளை எப்போதும் உடனிருந்து கண்காணிப்பது அவசியம்.இது போன்ற அவசரகால நிகழ்வுகளுக்கு 999 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!