UAE Tamil Web

முக்கியச் செய்தி: துபாய் பேருந்து விபத்து – காயமடைந்த 30 பேரில் பெரும்பாலானோர் இந்தியர்..!

Bus-trailer-accident

துபாயில் இன்று காலை 8.30 மணிக்கு வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவன ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, லாரி மீது மோதி விபத்திற்குள்ளாகியிருக்கிறது. துபாய் ஜெபல் அலி பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

இதனையடுத்து காயமடைந்த தொழிலாளர்கள் அனைவரும் அருகில் உள்ள NMC ராயல் மருத்துவமனைக்கு (NMC Royale Hospital) அழைத்துச்செல்லப்பட்டனர்.

முன்னர் வெளிவந்த செய்தியில் 28 பேர் மட்டுமே காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த வேளையில் தற்போது 30 பேருக்கு காயங்கள் ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

போலீஸ் விசாரணை

இந்த விபத்து குறித்துப் பேசிய துபாய் காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரோயி,” காலை 8.30 மணிக்கு ஜெபல் அலி இண்டஸ்ட்ரியல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. பேருந்திற்கும் டிரக்கிற்கும் போதுமான இடைவெளி இல்லாதது விபத்திற்கு காரணமாக அமைந்திருக்கிறது. 27 பெருக்கு லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. தகவல் தெரிவிக்கப்பட்ட உடனேயே காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்த இடத்தை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தனர். மேலும், போக்குவரத்து இடையூறை சரிசெய்தனர்” என்றார்.

பெரும்பாலானோர் இந்தியர்

ஜெபல் அலி டெக்னாலஜி பார்க்கில் அமைந்துள்ள வாசனைத் திரவிய தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் வழக்கம்போல ஜெபல் அலி பகுதியில் இருக்கும் தொழிலாளர் தங்கும் விடுதியில் இருந்து பணியிடத்திற்கு பேருந்தில் வருகையில் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது.

காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியர் என அந்நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

துபாய் கார்ப்பரேஷன் ஆம்புலன்ஸ் சேவையின் (DCAS) மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

ஆபத்தில்லை

NMC ராயல் மருத்துவமனையின் பொது அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர்.மகேஷ் கிருஷ்ண ராம் இதுகுறித்துப் பேசுகையில்,” அதிகமானோருக்கு லேசானது முதல் மிதமான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சிலருக்கு ஏற்பட்டிருக்கும் காயங்கள் மற்றும் சிதைவுகள் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு மயக்கமருந்து கொடுக்கப்பட்டுள்ளது. தெற்கு துபாயைப் பொறுத்தவரையில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் அவசர மருத்துவ சிகிச்சைகளுக்கு DCAS ஆல் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை நாங்கள் மட்டுமே. எலும்பு மற்றும் ஆழமான திசு சிதைவுகள் இருக்கின்றனவா? என்பதை அறிய ரேடியாலஜி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

விபத்து நேர்ந்த இடத்திற்கு துபாய் காவல்துறையின் தடயவியல் நிபுணர்கள் சென்று, ஆய்வுகள் மேற்கொண்டு விரிவான அறிக்கையை துபாய் போக்குவரத்து வழக்குத்துறையிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

 

Bus-trailer-accident
0 Shares
Share via
Copy link