UAE Tamil Web

துபாய் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவருக்கு ‘இந்த நோய்’.! சுகாதார ஆணையம்(DHA) வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

dubai

துபாயில் வசிக்கும் மக்களில் கிட்டத்தட்ட மூன்று பேரில் ஒருவர் நீரிழிவு நோயாளிகள்(சர்க்கரை நோயாளிகள்) அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் என்று புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

துபாய் சுகாதார ஆணையம் (DHA) வெளியிட்டுள்ள துபாயை தளமாகக் கொண்ட 2019-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, துபாய் மக்களில் குறைந்தது 30% பேர் நீரிழிவு நோயாளிகள் அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. துபாய் புள்ளிவிவர மையத்துடன் இணைந்து DHA மேற்கொண்ட சுகாதார கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

இந்த ஆய்வில் துபாய் மக்களில் பரவல், நிலை, நீரிழிவு நோய் மற்றும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து காரணிகள் பற்றிய ஆழமான பகுப்பாய்வு அடங்கும். இந்த ஆய்வு முடிவின் படி துபாயில் வசிக்கும் 18 வயதிற்கும் மேற்பட்டவர்களில், நீரிழிவு நோயின் ஒட்டுமொத்த பாதிப்பு 13.7 சதவீதமாகவும், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள்16.2 சதவீதமாகவும் உள்ளனர்.

dia

கடந்த 2017-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் துபாய் மக்கள் தொகையில் நீரிழிவு நோய்க்கான பாதிப்பு 15.2 சதவீதமாகவும், நீரிழிவு நோய்க்கு முந்தையவர்கள் 15.8 சதவீதமாகவும் இருந்தனர். 2019-ம் ஆண்டின் ஆய்வில் 25 – 45 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட 13% பேருக்கு பிரீடியாபயாட்டீஸ் இருப்பதும் தெரியவந்துள்ளது, இது இந்த வயதினரிடையே நீரிழிவு நோயைத் தொடர்ந்து பரிசோதிக்க வேண்டியதன் அவசியத்தை குறிக்கிறது.

நீரிழிவு நோய் அதிகமாக இருப்பதற்கான காரணங்களை கண்டறிய துபாய் மக்களிடையே உடல்நலம் தொடர்பான நடத்தை அபாயங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளும் இந்த கணக்கெடுப்பின் போது ஆய்வு செய்யப்பட்டன. முடிவில் உடல் செயலற்ற தன்மை(physical inactivity) மற்றும் உடல் பருமன் ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகளாக இருப்பதாக சுகாதார ஆய்வு காட்டியுள்ளது.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் 5% பேர் மட்டுமே தொடர்ந்து 10 நிமிடங்கள் கால்பந்து விளையாடுவது அல்லது ஓடுவது போன்ற தீவிரமான உடல் செயல்பாடுகளை தொடர்ந்து செய்பவர்களாக இருந்தனர்.17% பேர் மட்டுமே தினசரி மிதமான உடல் செயல்பாடுகளை செய்பவர்களாக இருந்தனர். இதில் வீட்டு வேலைகள் உட்பட பத்து நிமிட தொடர்ச்சியான வேலைகளும் அடங்கும்.

ஏறக்குறைய 65% பேர் வாரத்திற்கு 4 முதல் 6 முறை மற்றும் 18% பேர் வாரத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை உடல் செயல்பாடுகளை செய்பவர்கள் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உடல் பருமன்:

அதே போல உடல் பருமன் நீரிழிவு நோயின் தாக்கத்திற்கு வலுவான காரணமாக உள்ளது. ஏனெனில் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் சாதாரண பி.எம்.ஐ உள்ளவர்களிடையே நீரிழிவு நோய் 7.5% ஆக இருந்தது. இதுவே பருமனானவர்களிடையே நீரிழிவு நோய் பாதிப்பு 21.5%-ஆக இருந்தது.

வயது காரணி:

இந்த ஆய்வில் நீரிழிவு நோய் 18 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களில் 2.9 சதவீதமாகவும், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 43.7 சதவீதமாகவும் இருப்பதாக கூறுகிறது. எனவே நீரிழிவு நோய் வயதுடன் தொடர்புடையது என்ற அனைவரும் அறிந்த உண்மை தெளிவாகிறது. நீரிழிவு நோய் (அல்லது ப்ரீடியாபயாட்டீஸ்) உருவாகும் அபாயத்தில் உள்ளவர்களில் 5.4 சதவீதம் பேர் 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாகவும், 36.4% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினராகவும் உள்ளனர். இது ஆபத்தானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.