UAE Tamil Web

துபாய்: திருமண வரவேற்புகள், சமூக நிகழ்சிகள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்.! 200 பேர் வரை பங்கேற்க அனுமதி..

dubai

துபாயிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் பிற சமூக நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள வரும் அக்டோபர் 22 முதல் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக  வீடுகள், ஹோட்டல்கள், அரங்குகள் மற்றும் கூடாரங்களில் திருமண வரவேற்புகள் மற்றும் சமூக நிகழ்வுகள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை 22-ம் தேதி முதல் நீக்குவதாக துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக்குழு அறிவித்துள்ளது.

மேற்காணும் நிகழ்வுகளின் போது 4 சதுர மீட்டருக்கு ஒரு நபர் வீதம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நிபந்தனையின் கீழ், ஒவ்வொரு மண்டபத்திலும் அதிகபட்சம் 200 பேர் அனுமதிக்கப்படுவார்கள். அதே வேளையில் கூடாரங்கள்(tents) மற்றும் வீடுகளில் நடைபெறும் விசேஷ நிகழ்ச்சிகளில் 30 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

வழிகாட்டுதல்கள்:

  • நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை உச்சக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், நிகழ்ச்சிகள் 4 மணி நேரத்திற்கு மேல் நடத்தப்பட கூடாது.மேலும் வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்கள் விழாக்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • கைகுலுக்குவது, முத்தமிடுவது அல்லது கட்டிப்பிடிப்பதை விருந்தினர்கள் தவிர்க்க வேண்டும். அதற்கு பதில் உடலை தொடாமல் வாழ்த்து தெரிவிக்கும் முறைகளை பயன்படுத்த வேண்டும்.
  • 5 பேருக்கு மேல் இல்லாத மேஜையில் அமர்ந்திருக்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் முககவசத்தை அணிவது கட்டாயம். அதே போல விருந்தினர்கள் நேருக்கு நேர் உட்காருவதை தவிர்த்து, ஒருவருக்கொருவர் 1.5 மீட்டருக்கும் அதிகமான தூரத்தை பராமரிக்க வேண்டும்.
  • டேபிள்கள் ஒன்றுக்கொன்று குறைந்தது 2 மீட்டர் இடைவெளி விட்டு வைக்கப்பட வேண்டும்.
  • இருமல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ள யாரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்

மேற்கண்ட இந்த கட்டாய வழிகாட்டுதல்கள் ஹோட்டல், அரங்குகள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு(service providers) அனுப்பப்பட்டுள்ளது.



error: Alert: Content is protected !!