UAE Tamil Web

கோவிட்-19: துபாயில் சமூக இடைவெளி தொடர்பான ஸ்டிக்கர்களை வைக்காத கடைகளுக்கு எச்சரிக்கை..

sticker

கோவிட்-19 தொற்று பரவலை தடுக்க பின்பற்ற உத்தரவிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத காரணத்திற்காக 20 கடைகளுக்கு துபாய் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisment -

தொற்றிலிருந்து தனிநபர்களை பாதுகாக்க சுகாதார அதிகாரிகள் வகுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற துபாய் வணிக நிறுவனங்களை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து கள ஆய்விலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் துபாயில் 20 வணிக நிறுவனங்கள் தங்கள் கடைகளில் சமூக இடைவெளி தொடர்பான போஸ்டர்களை வைக்காத காரணத்திற்காக கடுமையான எச்சரிக்கைகளை பெற்றதாக, துபாய் பொருளாதாரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தங்களது சமீபத்திய ஆய்வுகளின் போது 649 நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுவது கண்டறியப்பட்டதாகவும், அபாரதமோ அல்லது நிறுவனங்களை மூடவோ உத்தரவிடப்படவில்லை என்றும் அந்த டீவீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ள துபாய் பொருளாதார துறை அதிகாரிகள், ஆய்வுகளின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத வணிகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்காத வணிக நிறுவனங்கள் பற்றிய தகவல்களை துபாய் கன்ஸியூமர் ஆப் மூலமோ அல்லது 600545555 என்ற எண்ணை அழைத்தோ அல்லது நுகர்வோர் உரிமைகள் வலைத்தளம் மூலமோ பொதுமக்கள் கூறலாம் என்றும் துபாய் பொருளாதார துறை கூறியுள்ளது.