வயதானவர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் துபாய் சுகாதார ஆணையம், துபாய் சமூக மேம்பாட்டு ஆணையம் (CDA) மற்றும் நோய்த்தடுப்பு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து வயதானவர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளன.
பிப்ரவரி 6 ஆம் தேதிவரையில் அமீரகத்தில் 4.2 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அதாவது 100 பேருக்கு 42.48 டோஸ்கள் என்ற வீதத்தில் தடுப்பூசியானது வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகமாகும்.
هيئة تنمية المجتمع وهيئة الصحة بدبي تطلقان حملة لتطعيم كبار المواطنين في منازلهم وذلك بالتعاون مع وزارة الصحة ووقاية المجتمع. #دبي #الإمارات @CDA_Dubai @DHA_Dubai @mohapuae pic.twitter.com/FTfEYDc4Kg
— Dubai Media Office (@DXBMediaOffice) February 7, 2021
கொரோனா தடுப்பூசி மையத்திற்கு வர முடியாமல் தவிக்கும் வயதானவர்களை மையப்படுத்தி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் நோயாளிகள், மற்றும் கொரோனாவினால் எளிதில் பாதிக்கப்படும் வாய்ப்புகளை அதிகளவில் கொண்டிருக்கும் நபர்களுக்கும் இத்திட்டம் நிச்சயம் உதவும் என சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
CDA வின் Live இல்லப் பராமரிப்புத் திட்டத்தில் பதிவு செய்த வயதானோர் அனைவருக்கும் அவர்களது வீட்டிற்கே சென்று தடுப்பூசி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் துகெர் (Thukher) அட்டையை வைத்திருத்தல் வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் தனியாக வசித்துவரும் முதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் சமூகத்தில் உள்ள முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களது நலமான வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் இத்திட்டத்தை துவங்கியுள்ளதாக CDA தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டத்தில் 8000 முதியவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.