UAE Tamil Web

துபாய்: அனைத்து ரமலான் டெண்ட்களுக்கான உரிமத்தையும் ரத்து செய்த அரசு..!

Ramadan tent

துபாயில் உள்ள இஸ்லாமிய விவகாரம் மற்றும் தொண்டு செயல்பாட்டுத்துறை (IACAD) துபாய் முழுவதும் அனைத்து ரமலான் டெண்ட்களுக்கான உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மேற்கொண்டுவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

கொரோனா சூழ்நிலை காரணமாக ஒரே நேரத்தில் பல்வேறு மக்களை ஒரே இடத்தில் கூட அனுமதிக்க முடியாது என்பதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாக IACAD இன்று தெரிவித்துள்ளது.

வழக்கமாக ரமலான் புனித மாதத்தில், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இப்தார் நேரத்தின்போது இலவச உணவினை மசூதிகள் வழங்கிட வேண்டும். இருப்பினும் மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது இந்த விதிமுறை வெளியிடப்பட்டிருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய தொண்டு துறையின் நிர்வாக இயக்குனர் அகமது தார்விஷ் அல் முஹைரி,” பல தனிநபர்கள் பொருட்களை வழங்கிட முன்வருகிறார்கள். இருப்பினும் அவர்கள்  IACAD இடம் உரிமம் பெற்ற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்தே இதனை மேற்கொள்ள முடியும். ரமலான் மாதத்தை பாதுகாப்புடன் மக்கள் அனைவரும் கடக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்படும்” என்றார்.

IACAD ன் தொண்டு நிறுவனங்கள் துறை இயக்குனர் முகமது முசாபே தாஹி இதுகுறித்துப் பேசுகையில்,” உணவு தேவைப்படும் மக்களுக்காக ரமலான் மாதத்தில் “டிஜிட்டல் மீல்ஸ் ஆஃப் ஹோப்” என்ற திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. கஷ்டத்தில் உழலும் மக்கள் சொமாட்டோ மூலமாக குறிப்பிட்ட சில ரெஸ்டாரன்ட்களில் இருந்து உணவைப் பெற இந்தத் திட்டம் உதவிவருகிறது.