UAE Tamil Web

நடுக்கடலில் படகிலிருந்து தவறிவிழுந்த இந்திய இளைஞர் – கவலையுடன் கரைக்குத் திரும்பியவர்களுக்கு காத்திருந்த இன்பதிர்ச்சி..!

Rajveer-Vakani-

குஜராத்தைச் சேர்ந்தவர் ராஜ்வீர் வக்காணி. அல் நஹ்தா பகுதியில் உள்ள தனது சகோதரரின் பிளாட்டில் வசித்துவரும் இவர் துபாயில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை அவரது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருக்கிறார் வக்காணி.

- Advertisment -

துபாய் மரீனா பகுதியில் இருந்து நண்பர்கள் அனைவரும் சொகுசுப் படகில் கடலுக்குள் சென்றிருக்கின்றனர். படகின் தரைத்தளத்தில் அமர்ந்திருந்த அனைவரும் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்க மேல்தளத்திற்குச் சென்றிருக்கிறார்கள். கடைசி நபராக வக்காணி தனது இருப்பிடத்தில் இருந்து எழுந்திரிக்கையில் தவறி கடலுக்குள் விழுந்திருக்கிறார்.

துரதிருஷ்டவசமாக வக்காணி விழுந்ததை யாரும் பார்க்கவில்லை. தன்னால் முடிந்தளவு குரல் எழுப்பியிருக்கிறார் வக்காணி. ஆனால் அப்போது அவரது ஒலி வட்டத்தைத் தாண்டி படகு சென்றிருந்தது. சென்ற வழியே படகு திரும்பி வரும் என எதிர்பார்த்து சுமார் 20 நிமிடம் விழுந்த இடத்திலேயே மிதந்திருக்கிறார் வக்காணி.

ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இருள் வேகமாக பரவியது. கடலின் குளிரில் உதடுகள் துடித்தன. ஏற்கனவே பலமுறை கடல்நீரைக் குடித்ததாலும் கண்களில் நீர் பட்டதாலும் அவரால் இயல்பாக இருக்க முடியாமல் போயிருக்கிறது. என்ன செய்யலாம்? என யோசிக்கும் வேளையில்தான் புர்ஜ் அல் அரப் கட்டிடத்தின் விளக்குகள் தூரத்தில் மின்மினியாகத் தெரிந்திருக்கின்றன. நீந்தி கரை சேர்வது என முடிவெடுத்திருக்கிறார் வக்காணி. வேறு வழியும் அவரிடம் இல்லை.

“சாகச மற்றும் உயிர்பிழைப்பு நிகழ்ச்சிகளை நான் பார்த்திருக்கிறேன். செய் அல்லது செத்துமடி என்னும் மனநிலைக்கு நான் வந்துவிட்டேன்” என்கிறார் வக்காணி.

விளக்குகள் எரியும் திசையிலேயே நீந்தியிருக்கிறார். இலக்கு தெளிவாகத் தெரிகிறது. பதற்றத்தை தவிர்க்கவேண்டும். நிதானமாக நீந்தத் துவங்கியிருக்கிறார் வக்காணி. நிமிடங்கள் மணிகளாகி காலம் கரைந்துகொண்டிருந்தது. ஆனாலும் வக்காணி விடுவதாய் இல்லை. சுமார் 2 மணி நேரம் நீச்சலடித்து கரைக்கு வந்து சேர்ந்திருக்கிறார் வக்காணி.

பாறைகள் நிரம்பிய பகுதியில் வந்து கால் ஊன்றி நின்றதும் அவருக்கு வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டிருக்கிறது. அந்தவழியாகச் சென்ற அமெரிக்கர் ஒருவர் அவரை எழுப்பி உதவி செய்து சாலைக்கு அழைத்து வந்திருக்கிறார். அடுத்ததாக ரஷிய நபர் ஒருவர் வக்காணியின் நிலையைக் கண்டு உதவி வேண்டுமா? எனக் கேட்க அவருடைய போனில் இருந்து தனது சகோதரருக்கு போன் செய்திருக்கிறார் வக்காணி.

வாடகை டாக்சி மூலமாக வீட்டிற்கு வந்துவிடும்படி அவர் சொல்லியிருக்கிறார். நீல நிற ஜீன்ஸும், வெள்ளை நிற டி-ஷர்ட்டும் அணிந்திருந்த வக்காணி முழுவதும் நனைந்திருந்ததால் முதல் டாக்சி டிரைவர் அவரை காரில் ஏற்ற மறுத்துவிட்டார்.

அடுத்ததாக வந்த டாக்சி ஓட்டுனர் வக்காணியை அழைத்துச்சென்று அவரது வீட்டில் இறக்கிவிட்டிருக்கிறார். வீட்டிற்குள் சென்றவுடன் உடனடியாக தனது நண்பர்களுக்கு போன் செய்து நடந்தவற்றை தெளிவாக விளக்கியிருக்கிறார் வக்காணி. ஆனால் அதற்குள் அவரது நண்பர்கள் காவல்துறையில் வக்காணியைக் காணவில்லை என புகாரளித்திருக்கின்றனர்.

வக்காணி இறந்துவிட்டதாக அவரது நண்பர்கள் அஞ்சிக்கொண்டிருந்த சமயத்தில் தான் அவர்களுக்கு வக்காணி போன் செய்திருக்கிறார். காவல்துறையினர் வக்காணியை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். நடந்தவற்றை தீர விசாரித்து அறிந்தபிறகு அவ்வழக்கை முடித்துவைத்தனர்.

இதுகுறித்து வக்காணி பேசுகையில்,” என்னுடைய உபதேசம் என்பது, கஷ்டமான சூழ்நிலை வரும்போது இது நம்மால் முடியும் என நீங்கள் உறுதியாக நினைக்கவேண்டும். உங்களுடைய ஆற்றலையும் உள் வலிமையையும் நீங்கள் நம்பவேண்டும். முக்கியமாக தைரியத்தை கைவிடாமல் இருக்கவேண்டும்” என்றார்.