UAE Tamil Web

3-16 வயதினருக்காக கஷ்டமில்லாத புதிய கோவிட்-19 பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ள துபாய்..

swab

3 முதல் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஸ்வாப் டெஸ்ட் மூலம் ஏற்படும் சங்கடத்தை போக்க துபாய் சுகாதார ஆணையத்தின் சேவை மையங்கள் மற்றும் அதன் ஸ்கிரீனிங் சென்டர்களில் கோவிட்-19 தொற்றை கண்டறிய புதிய சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

இந்த தகவலை DHA உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 3-16 வயதுடையவர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட்டிற்கு பதிலாக இனி அவர்களது உமிழ்நீர் மாதிரிகளை சேகரித்து கோவிட்-19 பரிசோதனை செய்யப்படும். உமிழ்நீர் சோதனைக்கும், PCR சோதனைக்கு வசூலிக்கப்படும் 150 திர்ஹம்ஸ் கட்டணமே என்றும், சோதனை முடிவுகள் 24 மணி நேரத்தில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முகமது பின் ரஷீத் மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் (MBRU) மற்றும் DHA ஆகியவற்றின் கூட்டு ஆய்வானது, குழந்தைகளின் உமிழ்நீர் அடிப்படையிலான சோதனையின் துல்லியத்தை கண்டறிந்தது. இதனை அடுத்தே ஆராய்ச்சி சார்ந்த மற்றும் ஆதார அடிப்படையிலான குழந்தைகளுக்கான இந்த புதிய பரிசோதனை முறை அமலுக்கு வந்துள்ளது.

புதிய ஆராய்ச்சி அடிப்படையிலான சான்றுகளை அடிப்படையாக கொண்ட இந்த புதிய உமிழ்நீர் சோதனை அசௌகரியத்தை நீக்கி, குழந்தைகளை ஸ்கிரீனிங் செய்து கொள்ள ஊக்குவிக்கும். கோவிட் -19 சோதனையின் மிகவும் வசதியான முறையை குழந்தைகளுக்கு இது உறுதி செய்யும் என DHA குறிப்பிட்டுள்ளது.

saliva

ஆராய்ச்சியில் கிடைத்த துல்லியம்..

கோவிட் -19 ஸ்கிரீனிங்கிற்குச் சென்ற 476 குழந்தைகளிடமிருந்து ஆராய்ச்சி குழு உமிழ்நீர் மற்றும் ஸ்வாப் டெஸ்ட் என இரண்டு மாதிரிகளையுமே சேகரித்தது. கொரோனா வைரஸை ஏற்படுத்தும் SARS-CoV-2 என்ற வைரஸை கண்டறிய இந்த மாதிரிகள் பின்னர் சோதிக்கப்பட்டன. இந்த ஆய்வில் 87.7% உணர்திறன் மற்றும் 98.5 % விவரக்குறிப்புடன் உமிழ்நீரை வைரஸ் கண்டறிதலுக்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டது.

உமிழ்நீர் சோதனைகளுக்கான நேர்மறை மற்றும் எதிர்மறை முன்கணிப்பு மதிப்புகள் முறையே 92.2% மற்றும் 97.6% ஆகும். இம்முடிவுகள் குழந்தைகளுக்கான கோவிட் -19 ஸ்கிரீனிங்கில் உமிழ்நீர் ஒரு பயனுள்ள நோயறிதல் மாதிரி என்பதை காட்டியதாக DHA தெரிவித்துள்ளது. அமீரகம் மற்றும் MENA பிராந்தியத்தில் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, இன்றுவரை குழந்தைகளின் COVID-19 சோதனைக்கான உமிழ்நீர் பற்றிய மிகப்பெரிய ஆய்வாகும்.

தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதில் துபாயின் முயற்சிகள் ஆராய்ச்சி உந்துதல் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் பெருமிதம் கொள்வதாக, MBRU-ன் மருத்துவ கல்லூரி ஆய்வின் முன்னணி புலனாய்வாளர் மற்றும் குடும்ப மருத்துவ உதவி பேராசிரியருமான டாக்டர் ஹனன் அல் சுவைதி தெரிவித்துள்ளார்.

அதே போல சோதனைக்கு உமிழ்நீரைப் பயன்படுத்துவதனால் கிடைக்கும் பிற நன்மைகள் என்னவெனில், முன்கள சுகாதார நிபுணர்களுக்கான அபாயத்தை குறைப்பது மற்றும் முக்கியமான சுகாதார உபகரணங்களின் அழுத்தத்தைக் குறைப்பதுடன், அவர்கள் பாதுகாப்புகளை பயன்படுத்துவதற்கான தேவையை நீக்குவது’என்று குறிப்பிட்டுள்ளார்.