UAE Tamil Web

“புர்ஜ் கலீஃபாவில் வீடியோ மூலமாக காதலை சொல்லப் போகிறேன்” – துபாய் வாழ் இந்தியரின் கனவு நிறைவேறுமா..!

LED-show_

துபாயில் உள்ள டிராவல் ஏஜென்சி ஒன்றில் வேலை பார்த்துவரும் இந்தியர் ஒருவர் (29) தனது தோழியிடம் காதலைத் தெரிவிக்க உள்ளார். அதுவும் புர்ஜ் கலீஃபா கட்டிடத்தின்மீது வீடியோ மூலம் தனது காதலை, தோழியிடம் வெளிப்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisment -

“தற்போதைக்கு எங்களுடைய பெயர்களை வெளியிடவேண்டாம்” என இந்த இளைஞர் கேட்டுக்கொண்டதன் காரணமாக, கல்ஃப் நியூஸ் நிறுவனமும் இளைஞர் மற்றும் அவரது காதலியின் பெயரைத் தனது கட்டுரையில் குறிப்பிடவில்லை.

இரு தேசங்களை இணைத்த காதல்

மேற்கத்திய நாட்டைச் சேர்ந்தவரான இந்தப் பெண், முதன் முறையாக துபாய்க்கு சுற்றுலா வருகையில் இந்த இந்தியரைச் சந்தித்திருக்கிறார். விதியோ அல்லது இளைஞரின் மதியோ இருவரும் நண்பர்களாக மாறியிருக்கிறார்கள். பின்னர் இருவருடைய நம்பர்களும் கைமாறியிருக்கின்றன. இருவரும் அமீரகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் சென்றிருக்கிறார்கள். தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினாலும், இந்தியருடன் பேசுவதை தொடர்ந்திருக்கிறார் இந்தப் பெண் (30).

சில மாதங்கள் கழித்து மீண்டும் துபாய்க்கு அப்பெண் வந்திருக்கிறார். இருவருக்குமே புதிய தேசங்களுக்கு பயணிப்பதும், அங்கே கிடைக்கும் பிராந்திய உணவுகளை ருசி பார்ப்பதும் மிகுந்த விருப்பமான ஒன்றாக இருந்திருக்கிறது. ஈபிள் டவர் உச்சி, இமயமலையின் பனிக்குகை, ஆப்பிரிக்காவின் பரந்த காடு என சுமார் 20 நாடுகளில் உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு இந்த ஜோடி பயணித்திருக்கிறது.

“அவளால் எப்போதும் தன்னலம் இல்லாமல் இருக்க முடிகிறது. பிறருடைய தேவைகளை அவள் கண நேரத்தில் உணர்ந்துகொள்கிறாள். என்னுடைய குடும்பத்தினரிடம் என்னைவிட அவளால் நெருக்கமாக உரையாட முடிகிறது. வாழ்வில் உச்சிகளையும், பள்ளத்தாக்கையும் நாம் சந்தித்தே ஆகவேண்டும். ஆனால் என்னுடைய இந்தப் பயணத்தில் அவளுடன் நான் இருக்கவேண்டும் என விருப்பப்படுகிறேன். இரண்டு மாதங்களாக தேடியலைந்து அவளுக்காக வைரம் ஒன்றினை வாங்கியிருக்கிறேன். புர்ஜ் கலீபாவில் வெளியிடப்படும் வீடியோவில் அந்த வைரமும் இடம்பெறும்” என இந்திய இளைஞர் குறிப்பிட்டார்.

வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி இரவு 8 மணிக்கு புர்ஜ் கலீபாவில் தனது காதலை வெளிப்படுத்த இருக்கிறார் இந்தியர். அன்றைய இரவு அவருடைய காதலிக்கு ஒரு கேள்வியையும் வீடியோ மூலமாக கேட்க இருக்கிறார்.

“புது உலகத்தை எனக்கு நீ தந்திருக்கிறாய், நான் அதனை எப்போதும் வைத்துக்கொள்ளட்டுமா?” எனப் பொருள்படும் படி “You gave me a whole new world, can I have it forever?” என அந்த வீடியோவில் இடம்பெற இருப்பதாக இந்தியர் குறிப்பிட்டார்.

யார் அந்தப் பெண்? இந்தியரின் கேள்விக்கு அவருடைய காதலியின் பதிலென்ன? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.