கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதியை நம்மால் அத்தனை எளிதில் மறக்க முடியாது.
ரமலான் பெருநாளுக்காக ஓமானிலிருந்து துபாய் வந்துவிட்டு மீண்டும் ஓமான் திரும்பிக்கொண்டிருந்த பேருந்து, ரஷீதியா எக்ஸிட்(Rashidiya exit) அருகில் ஷேக் முஹம்மது பின் சயீத் சாலையில் மாலை 5.40 மணிக்கு விபத்தைச் சந்தித்தது. இந்த கோர விபத்தில் வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
சாலையில் வலது பக்கம் திரும்புவதற்குப் பதிலாக, ஓட்டுனர் பேருந்தை இடது புறமாக திருப்ப, அங்கே வைக்கப்பட்டிருந்த உயரத் தடுப்பானில் பேருந்தானது மோதியிருக்கிறது. பேருந்தில் இடப்பக்கத்தில் உயரத்தடுப்பான் மோதியதில் அந்தப் பக்கம் அமர்ந்திருந்த அனைவரும் மரணமடைந்தனர்.
இதனையடுத்து துபாய் நீதிமன்றம் ஓட்டுனருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தண்டனை முடிவடைந்த பிறகு அவர் நாடுகடத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ஓட்டுனர் வழக்கை எடுத்துச் சென்றார். அங்கே, ஓட்டுனருக்கு வழங்கப்பட்ட 7 ஆண்டுகள் தண்டனையை ஓர் ஆண்டாக நீதிமன்றம் குறைத்துள்ளது.