UAE Tamil Web

துபாயிலிருந்து சென்னை சென்ற விமானத்தில் சுயநினைவை இழந்த பயணி : நடுவானில் உயிரைக் காப்பற்றிய பெண்களைக் கொண்டாடிவரும் நெட்டிசன்கள்..!

NAT-CREW

மார்ச் 19 ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை சென்றுகொண்டிருந்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் திடீரென மயக்கமடைந்திருக்கிறார். நினைவிழந்த அவரை விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் குழுவைச் சேர்ந்த 4 பேர் காப்பாற்றியிருக்கிறார்கள்.

- Advertisment -

இதை நேரில்கண்ட சக பயணி ஒருவர் சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்வைப் பற்றிப் பதிவிட தற்போது நெட்டிசன்கள் பலரும் இப்பணிப் பெண்களை பாராட்டிவருகின்றனர்.

நடுவானில் நிகழ்ந்த விபரீதம்..

இதனை உறுதிப்படுத்தியுள்ள எமிரேட்ஸ் விமான நிறுவனம், “EK 544 எமிரேட்ஸ் விமானத்தில் பயணி ஒருவர் மயக்கமடைந்துள்ளார். சுய நினைவினை இழந்த அவருக்கு பணிப்பெண்கள் குழு மருத்துவ வழிமுறைகளின்படி முதற்கட்ட சிகிச்சையை அளித்தனர். சென்னையில் விமானம் தரையிறங்கும் போது அப்பயணி இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தார்” எனத் தெரிவித்துள்ளது.

உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி..

அதே விமானத்தில் பயணித்த சென்னையைச் சேர்ந்த நரேன் பாலசுப்ரமணியன் இந்த நிகழ்வைப் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில்,” கொரோனாவால் இறந்துபோன எனது தந்தையின் முகத்தை இறுதியாகப் பார்க்க ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது சக பயணி ஒருவர் மூர்ச்சையானார். உடனடியாக 4 பணிப் பெண்கள் அவருக்கு ஆக்சிஜன் செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் CPR வழிமுறைகளை கவனமுடன் கையாண்டு அவரை சகஜ நிலைக்கு கொண்டுவர உதவினர். அவர் நல்லபடியாக தனது குடும்பத்திடம் செல்ல இப்பெண்கள் உதவியிருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தனது லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் இப்பெண்களில் 2 பேரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நரேன்,” உயிரைக் காப்பாற்றிய 4 பெண்களின் குழுவில் அங்கம் வகித்த 2 பெண்கள். ஓர் உயிரைக் காத்ததற்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவிற்கு இதுவரையில் 1000 ற்கும் மேற்பட்ட லைக்குகள் வந்திருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பலரும் இதனைப் பாராட்டி கருத்து தெரிவிப்பதோடு, தாங்கள் சந்தித்த இதுபோன்ற அனுபவங்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

கேபின் குழு பயிற்சியின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர்.கேத்தரின் பைர்ட் இட்டுள்ள கமெண்டில்,” EK குழுவை நினைத்துப் பெருமைப்படுகிறேன். திறமை, தொழில்முறை, இரக்கம் மற்றும் தகுதியும் படைத்த குழு இது. அவர்களை பயிற்றுவித்த குழுவினருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்தாகவேண்டும். இதனை உலகறியச் செய்த நரேன் உங்களுக்கு நன்றி. உங்களுடைய இழப்பிற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.