UAE Tamil Web

வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய துபாய் துணை ஆட்சியாளர் – “எனது சகோதரரை வரவேற்கிறேன்” என ஷேக் முகமது ட்வீட்..!

dubai deputy ruler

துபாயின் துணை ஆட்சியாளரும் நிதி அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Rashid Al Maktoum) அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய காரணத்தினால் சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்தார். இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து நேற்று அவர் நாடு திரும்பினார்.

அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் விமான நிலையத்திற்கே சென்று அவரை வரவேற்ற வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

துபாயின் பட்டத்து இளவரசரும் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) மற்றும் அவரது சகோதரர் ஷேக் அகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Ahmed Bin Rashid Al Maktoum) உள்ளிட்ட அரச குடும்ப உறுப்பினர்கள் துபாயின் துணை ஆட்சியாளரை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்திருந்தனர்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துணை ஆட்சியாளர் மற்றும் பட்டத்து இளவரசர் என அனைவருமே முகக்கவசம் அணிந்திருந்தார்கள். கூடவே, சமூக இடைவெளியுடன் நின்று தங்களது அன்புகலந்த வரவேற்பை அரச குடும்பத்தினர் வெளிப்படுத்த, துணை ஆட்சியாளர் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.

சகோதரரை வரவேற்கிறேன்

“எனது சகோதரரும் துணை ஆட்சியாளருமான ஹம்தான் பின் ரஷீத் அவர்களை அன்புடன் அவரது தாயகத்திற்கு வரவேற்கிறேன். உங்களுடைய பாதுகாக்கப்பட்ட வாழ்விற்காக இறைவனுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் உங்களது அன்புக்குரியவர்களுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார்.