UAE Tamil Web

துபாய்: தனியார் எலக்ட்ரிக் வாகன உரிமையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.! புதுமையான ஸ்மார்ட் சார்ஜரை கண்டுபிடித்துள்ள Dewa..

EV

துபாயில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதை இன்னும் வசதியாக்க துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் புதிய கண்டுபிடிப்பை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

- Advertisment -

மின்சார வாகனங்களுக்கான ஸ்மார்ட் யுனிவர்சல் சார்ஜரை துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம்(Dewa) உருவாக்கியுள்ளது. துபாய் முழுவதும் 270-க்கும் மேற்பட்ட கிரீன் சார்ஜர் நிலையங்களை Dewa நிறுவியுள்ளது. இந்நிலையில் எலக்ட்ரிக் வாகன ஓட்டுநர்கள் இனி தங்கள் சொந்த கேபிள்களை கையோடு கொண்டு வர வேண்டியதில்லை. ஏனெனில் தற்போதைய புதிய கண்டுபிடிப்பான ஸ்மார்ட் சிஸ்டம் மூலம் அனைத்து வகையான எலக்ட்ரிக் வாகனங்களையும் ஒரே கேபிள் மற்றும் பிளக் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

ஏசி அல்லது டிசி என்று மின்சார வாகனங்களுக்கு வெவ்வேறு சார்ஜிங் முறைகள் தேவைப்படுகின்றன. ஆனால் Dewa ஏற்படுத்த உள்ள சார்ஜிங் நிலையங்களில் இது ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனென்றால் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட உள்ள ஸ்மார்ட் அமைப்பு தானாகவே பிளக் மற்றும் சார்ஜரை வாகனத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

R&D மையத்தின் ஸ்மார்ட் கிரிட்ஸ் ஒருங்கிணைப்பு ஆராய்ச்சியாளரான ஹமாத் முகமது தானியங்கு தகவமைப்பு பற்றி விளக்கம் அளித்தார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட் அமைப்பில் ஆப்டிக்கல் ஐடென்டிஃபிக்கேஷன், ஒரு கேமரா, ஒரு மைக்ரோ பிராசஸர், வாகனத் தட்டு எண்ணை அடையாளம் காணக்கூடிய மற்றும் சேமிக்கப்பட்ட தரவுத்தளத்தின் மூலம் வாகனத்திற்கான பொருத்தமான பிளக் வகைகளை அடையாளம் காணக்கூடிய AI புரோகிராம் ஆகியவை அடங்கும். மேற்கண்டவற்றை கொண்டு தேவையான சார்ஜிங் முறையை செயல்படுத்த ஸ்மார்ட் அமைப்புக்கு உத்தரவிடலாம்.

EV!

இந்த முழு செயல்முறையும் வெளிப்புற குறுக்கீடு இல்லாமல் நடைபெறும். அனைத்து பயனர்களும் செய்ய வேண்டியது சார்ஜிங் கேபிளை தங்களது மின்சார வாகனத்துடன் இணைப்பது மட்டுமே என்றார். முதலில் எலக்ட்ரிக் வாகன கிரீன் சார்ஜர் சந்தாதாரர்கள் Dewa வழங்கியுள்ள சிறப்பு அட்டையை ஸ்கேன் செய்து, கேபிளை சார்ஜருடன் இணைத்து, பின் தங்களது வாகனத்தை சார்ஜ் செய்து கொள்ளலாம் என்று அவர் விளக்கினார். துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையத்தின் ஆராய்ச்சி குழு இந்த கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளது.

இந்த யுனிவர்சல் வாகன சார்ஜர் யோசனை மனித மையப்படுத்தப்பட்ட மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் குறித்த ஆராய்ச்சி திட்டத்தை மையமாகக் கொண்டது என்று DEWA R&D மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் எட்வின் ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார். தரமான, வேகமான மற்றும் நேரடியான சேவைகளைக் கொண்ட சார்ஜிங் நிலையங்களை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகளைக் கண்டறிவது இந்த திட்டத்தின் நோக்கம் என்றார்.

சுருக்கமாக, சொல்வதென்றால் DEWA-வின் ஆராய்ச்சியாளர்கள் அனைத்து மின்சார வாகன சார்ஜிங் முறைகளையும் ஒருங்கிணைத்து, ஒரு ஒற்றை கேபிள் மற்றும் அனைத்து அமைப்புகளுக்கும் இணக்கமான பிளக்கை உருவாக்கி, பின்னர் இந்த செயல்முறையை தானியக்கமாக்கியுள்ளனர். ஏசி அல்லது டிசி பயன்படுத்தினாலும், அனைத்து வகையான மின்சார வாகனங்களையும் ஒரே கேபிள் மற்றும் பிளக் மூலம் இனி சார்ஜ் செய்து கொள்ளமுடியும்.

கிரீன் சார்ஜர் சேவைகளில் பதிவு செய்துள்ள தனியார் மின்சார வாகன உரிமையாளர்கள், 2021 டிசம்பர் 31 இறுதி வரை தங்கள் வாகனங்களை இலவசமாக சார்ஜ் செய்ய முடியும். இது பப்ளிக் சார்ஜிங் நிலையங்களுக்கு மட்டுமே பொருந்தும், டொமஸ்டிக் நிலையங்களுக்கு பொருந்தாது.