UAE Tamil Web

துபாய்: இனி இவர்களும் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் – துபாய் ஆட்சியாளரின் புதிய அறிவிப்பு..!

Stock-Dubai-vaccine_

துபாய்: அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி குறிப்பிட்ட சில பிரிவினரும் கொரோனா தடுப்பூசியினைப் பெறும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது துபாய் சுகாதார ஆணையம் (DHA). அதன்படி,

- Advertisment -

செல்லுபடியாகும் துபாய் ரெசிடென்ட் விசாவை வைத்திருக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் DHA விற்குச் சொந்தமான நிலையங்களில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.

அதேபோல, 60 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்கள், வேறு எந்த எமிரேட்டில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ரெசிடென்ட் விசாவை வைத்திருக்கும்பட்சத்தில் அவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் துபாயில் வசிப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.

கொரோனா தடுப்பூசியைப் பெறத் தகுதிவாய்ந்த வயதுகளிலும் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாக DHA தெரிவித்துள்ளது. அதன்படி,

தற்போது பைசர்-பையோஎன்டெக் (Pfizer-BioNTech) தடுப்பூசியை 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பெறலாம். முன்னதாக இது 18 வயது நிரம்பியவர்களுக்கே அளிக்கப்பட்டுவந்தது.

ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனக்கா (Oxford-AstraZeneca) தடுப்பூசி தற்போது 18 வயது நிரம்பிய அனைவருக்கும் போடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னதாக 18-65 வயதுடையவர்களுக்கு மட்டுமே இந்தத் தடுப்பூசியானது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

GCC நாடுகளைச் சேர்ந்த, செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி வைத்திருப்பவர்கள் DHA விற்குச் சொந்தமான இடங்களில் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.

எப்படி முன்பதிவு செய்வது?

DHA வின் மருத்துவ சேவைகள் மற்றும் செவிலியர் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் தலைவருமான டாக்டர்.ஃபரிதா அல் காஜா இதுகுறித்துப் பேசுகையில்,” கடந்தாண்டு சுகாதார ஆணையம் வகுத்துள்ள திட்டங்களின் அடிப்படையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் பின்பற்றப்படும் வழிமுறைகளை கணக்கில் கொண்டு இந்த திட்டத்தின் படிநிலைகள் உரிய நேரத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது” என்றார்.

கொரோனா தடுப்பூசி பெற தகுதி வாய்ந்தவர்கள் DHA அப்ளிகேஷன் மூலமாகவோ, 800 342 என்ற எண்ணிற்கு DHA அழைப்பு மையத்தை தொடர்புகொண்டு தடுப்பூசி பெற முன்பதிவு செய்யலாம்.

யாரெல்லாம் தடுப்பூசி பெறலாம்? முழு பட்டியல்:

  • 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அமீரக குடிமகன்கள்.
  • செல்லுபடியாகும் துபாய் ரெசிடென்ட் விசாவை வைத்திருக்கும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் DHA விற்குச் சொந்தமான நிலையங்களில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.
  • அதேபோல, 60 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்கள், வேறு எந்த எமிரேட்டில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ரெசிடென்ட் விசாவை வைத்திருக்கும்பட்சத்தில் அவர்கள் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர்கள் துபாயில் வசிப்பதை உறுதிப்படுத்தவேண்டும்.
  • செல்லுபடியாகும் துபாய் ரெசிடென்ட் விசாவை வைத்திருக்கும் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையாவர்கள் நீண்ட நாள் நோயினால் பாதிக்கப்படவர்கள், மாற்றுத்திறனாளிகள்.
  • முன்களப் பணியாளர்கள், முக்கிய துறைகளில் பணிபுரிவோர்.

முன்களப் பணியாளர்கள், முக்கிய துறைகளில் பணிபுரிவோருக்கான கொரோனா தடுப்பூசி முன்பதிவு, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறைகளுடன் இணைந்து செய்யப்படும்.

அனைவருக்கும் எளிதில் கொரோனா தடுப்பூசி கிடைக்கவும், ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைக்கவும் DHA தொடர்ந்து பாடுபட்டு வருவதாக அல் காஜா தெரிவித்தார்.