UAE Tamil Web

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் துபாய் அரசுக்கு 92 சதவிகித மதிப்பீடு..!

2020_dubai_world_trade_centre_and_sheikh_zayed

துபாய் பட்டத்து இளவரசர் நிறுவனங்களுக்கான மகிழ்ச்சி தரவரிசையை (Happiness Ranking) வெளியிட்டார். அதில், துபாய் அரசு நிறுவனங்கள் மேற்கொண்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் பலனாக அவற்றிற்கு 92 சதவிகித மதிப்பீடு கிடைத்திருப்பதாக இளவரசர் தெரிவித்திருக்கிறார்.

“கொரோனா தடுப்பிற்காக மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் பலனாக துபாய் அரசு நிறுவனங்களுக்கு 92 சதவிகித மதிப்பீடு கிடைத்திருப்பது, பெருநோயை நாம் எவ்வாறு எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது” என துபாயின் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தெரிவித்தார்.

“துபாய் பணிக்குழுக்களின் அயராத முயற்சிகளுக்கு நான் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். அனைத்து குழுக்களும் ஒற்றுமையுடன் பணியாற்றி பொதுமக்களின் மகிழ்ச்சி என்பதை நிலைநாட்ட வேண்டும். அதுவே அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் நோக்கமுமாகும்” என இளவரசர் குறிப்பிட்டார்.

மக்களின் மகிழ்ச்சி என்ற ஒரே நோக்கத்தோடு கண்டுபிடிப்பு, சேவைகள், முன்னெடுப்புகள் போன்ற அனைத்து திட்டங்களிலும் துபாய் அரசு முழுவீச்சுடன் இயங்கிவருகிறது. அனைத்து அரசு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும் நோக்கில் செயல்படவேண்டும். இதன்மூலம் மகிழ்ச்சியான நகரங்களின் பட்டியலில் துபாய் முதலிடம் பெறும் என இளவரசர் தெரிவித்தார்.

மேலும்,” துபாய் ஆட்சியாளரின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான பொதுமக்களின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துதலை மையமாகக்கொண்டு துபாய் வாடிக்கையாளர் சேவை மையத்தின் மிஸ்டரி ஷாப்பர் & எம்ப்ளாயி ஹேப்பினஸ் இன்டெக்ஸ் (Mystery Shopper and Employee Happiness Index) என்னும் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஆண்டுதோறும் ஜனவரி 18 ஆம் தேதி வெளியிடப்படும் என செப்டம்பர் 2019 ஆம் ஆண்டு முடிவெடுத்தோம்” என ஷேக் ஹம்தான் குறிப்பிட்டார்.

கொரோனா காலமாக இருந்தாலும் வாடிக்கையாளர் மகிழ்ச்சி கணக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் எங்களது எதிர்பார்ப்புகளையும் மீறி வாடிக்கையாளர் மகிழ்ச்சி மதிப்பீடு 84 சதவிகிதமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல, வாடிக்கையாளர் நம்பிக்கை மதிப்பீடு 95.1 சதவிகிதமாக இருக்கிறது – ஷேக் ஹம்தான்.

கொரோனா காரணமாக பல அரசுகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி மற்றும் மகிழ்ச்சி குறித்து கணக்கெடுப்பு செய்யமுடியாத நிலை ஏற்பட்டபோதும், துபாய் அரசு நிறுவனங்கள் அதைச் செய்து முடித்திருப்பது தனக்கு பெருமையாக இருப்பதாக இளவரசர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டுக்கான துபாய் வாடிக்கையாளர் சேவை மையத்தின் மிஸ்டரி ஷாப்பர் & எம்ப்ளாயி ஹேப்பினஸ் இன்டெக்ஸ் (Mystery Shopper and Employee Happiness Index) கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானதை முன்னிட்டே இளவரசர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

துபாய் நிர்வாகக் கவுன்சிலின் துபாய் கவர்ன்மெண்ட் எக்செலன்ஸ் ப்ரோக்ராம் (Dubai Government Excellence Programme) அரசு நிறுவனங்களின் சேவைத் தரங்களை ஆய்வு செய்கிறது. துபாய் ஆட்சியாளரின் உத்தரவின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இதேபோல, ஷேக் ஹம்தான் புதிய திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளார். துபாய் வாடிக்கையாளர் சேவை மையத்தின் மிஸ்டரி ஷாப்பர் & எம்ப்ளாயி ஹேப்பினஸ் இன்டெக்ஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் அரசு நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இதன்மூலம் நிறுவனங்கள் தங்களது சேவைகளை மேம்பட்ட தரத்தில் வழங்கமுடியும் என இளவரசர் தெரிவித்துள்ளார்.

2020_dubai_world_trade_centre_and_sheikh_zayed
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap