UAE Tamil Web

முக்கியச் செய்தி: வெளிநாட்டிலிருந்து துபாய் வருபவர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்கிய அரசு..!

NAT-DUBAI-AIRPORT

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக வெளிநாட்டிலிருந்து துபாய் வருவோருக்கான புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகளை, பெருமதிப்பிற்குரிய ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையிலான துபாய் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகள் வரும் ஜனவரி 31 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

எந்த நாடுகளில் இருந்தும் துபாய் வருவதற்கு முன்பாக வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டிங் விசாவில் வரும் பயணிகள் அனைவரும் PCR பரிசோதனை செய்திருக்க வேண்டும்.

கொரோனா தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து துபாய் வருபவர்கள், விமான நிலையத்தில் மீண்டும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட பயணிகள் அனைவரும் தங்களது பயண நேரத்திற்கு முன்னதாக 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருத்தல் அவசியம். முன்னதாக இந்த பரிசோதனை 96 மணி நேரத்திற்குள் எடுத்தால் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விலக்கு

வெளிநாட்டிலிருந்து (எந்த நாடாக இருந்தாலும்) அமீரகம் திரும்பும் அமீரக குடிமக்கள் தங்களது பயணத்திற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்க தேவையில்லை என்னும் நடைமுறையே தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவர்கள் துபாய் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது.

PCR பரிசோதனை

துபாயில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள், தாங்கள் செல்லும் நாடு கொரோனா பரிசோதனை (ரேபிட் PCR அல்லது ரேபிட் ஆன்டிஜன்) எடுத்திருக்க வேண்டும் என நிர்பந்தித்தால் அதனை உரிய நேரத்தில் மேற்கொள்ள வசதியாக பரிசோதனை நிறுவனங்களுடன் துபாய் விமான நிலையங்கள் இணைந்து செயல்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.

குவாரண்டைன்

குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டிங் விசாவில் துபாய்க்கு வருபவர்கள், ALHOSN அப்ளிகேஷனை தரவிறக்கி தங்களது கொரோனா பரிசோதனை (வருகையின்போது எடுத்தது) குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்யவேண்டும். பரிசோதனை முடிவுகள் நெகட்டிவ் என வரும் வரை பயணிகள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒருவேளை பாசிட்டிவாக முடிவு வரும்பட்சத்தில் அறிகுறி இருந்தாலும் இல்லாவிடினும் பயணி, 10 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலில் இருத்தல் வேண்டும். தொற்று உறுதியான நபர் மற்றும் அவருடன் அதே வீட்டில் வசிப்பவர்களுக்கான விதிமுறைகளையும் துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு, நெகட்டிவ் என கொரோனா பரிசோதனையில் வராவிடினும் 10 நாட்கள் முடிந்த பிறகு தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம். தற்போது, 10 வது நாளில் உங்களுடைய நோயெதிர்ப்பு அதிகமாகி, எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ளாமல் கடைசி 3 நாட்களில் காய்ச்சல் கட்டுக்குள் இருப்பின் நீங்கள் தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.

எப்படியாகினும் உங்களுடைய தனிமைப்படுத்தலுக்கான காலம் முடிவடைந்தவுடன் எண்ட் ஆஃப் குவரண்டைன் (End of quarantine) சான்றிதழை நீங்கள் துபாய் சுகாதார ஆணையத்திடம் இருந்து பெற்றிருத்தல் அவசியம்.