UAE Tamil Web

போலீஸ் மீதான பயத்தை போக்க 6 வயது சிறுவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த துபாய் போலீஸ்.!

dubai police

சீருடை அணிந்த போலீஸ்காரர்களை பார்த்தாலே பயந்த ஆறு வயது சிறுவனுக்கு துபாய் போலீஸ் இனிமை மற்றும் ஆச்சரியம் கலந்த அனுபவத்தை வழங்கி அவனது பயத்தை போக்கியுள்ளது.

- Advertisment -

போலீஸை பார்த்தாலே பயப்படும் சிறுவனின் வீட்டிற்கு சிறப்பு விசேஷ பரிசுகளுடன் சென்று இன்ப அதிர்ச்சி அளித்தனர் போலீஸ் அதிகாரிகள். சமூக மகிழ்ச்சித் துறையின் பொதுத் துறை இயக்குநர் கர்னல் அலி கல்ஃபன் அல் மன்சூரி இது தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிறுவனின் போலீஸ் மீதான பயத்தை கண்ட அவனது குடும்பத்தினர் காவல்துறையை அணுகி, காவலர்கள் நல்ல மனிதர்கள் என்பதை அவருக்கு உணர்த்த உதவி செய்யுமாறு கோரினர். இதனை பரிசீலித்த நாங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு துறையிலிருந்து ஒரு சிறப்புக் குழு மற்றும் பெண் காவலரை சிறுவனது வீட்டிற்கு அனுப்பினோம்.

சிறுவனுக்கு நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்துவதை இலக்காக கொண்ட அந்த குழு ஒரு போலீஸ் சீருடையை பரிசளித்தும், துபாய் காவல்துறையின் ஆடம்பர ரோந்து வாகனம் ஒன்றில் சிறுவனை கூட்டி சென்றும் மகிழ்வித்தது.

இதற்காக காவல் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டுள்ள சிறுவனின் குடும்பத்தினர், காவல்துறையின் முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை என்று கூறினர். தங்கள் கோரிக்கைக்கு உடனடியாக பதிலளித்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.

துபாய் போலீஸ் எப்போதுமே பொதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், சமூகத்தில் மகிழ்ச்சியைப் பரப்பவும், நேர்மை மற்றும் நீதிக்காக நிற்கும் காவல்துறை அதிகாரிகளின் நேர்மறையான பிம்பத்தை ஊக்குவிப்பதற்கும் தயாராக உள்ளது. பொதுமக்களின் நம்பிக்கை எங்களுக்கு மிக முக்கியமானது. சமூக உறுப்பினர்கள், குறிப்பாக குழந்தைகள், எங்கள் உதவி தேவைப்படும்போதெல்லாம் தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் கர்னல் அலி கல்ஃபன்.