UAE Tamil Web

கீழே கிடந்த பர்ஸுக்குள் கத்தை கத்தையாகப் பணம் : காவல்துறையிடம் ஒப்படைத்தவருக்குக் குவியும் வாழ்த்துக்கள்..!

Dubai-Police-honour-Emirati-for-returning-Dh12-000-

அமீரக குடிமகனான சலீம் முகமது யூசஃப் ஒபைத் அல் காபி (Salem Mohammed Yousef Obaid Al Kaabi) கடந்த வாரத்தில் துபாயின் அபு ஹெயில் பகுதியில் நடந்து சென்றிருக்கிறார். அப்போது சாலையில் பர்ஸ் ஒன்று கிடக்க, அதனை எடுத்து திறந்து பார்த்திருக்கிறார். 12,000 திர்ஹம்ஸ் பணம் மற்றும் சில நகைகள் அதிலிருப்பதை அறிந்த காபி நேரடியாக அல் குசைஸ் காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

காவல் அதிகாரியிடம் நடந்தவற்றை விளக்கி, பர்ஸை ஒப்படைத்திருக்கிறார். அவருடைய நேர்மை மற்றும் நற்பண்பைப் பாராட்டி காவல்துறையினர் வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்துப் பேசிய அல் குசைஸ் காவல்நிலையத்தின் தற்காலிக இயக்குனர் பிரிகேடியர் அப்துல் ஹலீம் முகமது அகமது அல் ஹாஷ்மி (AbdulHalem Muhammad Ahmad Al Hashmi),” மக்களிடையே சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை துபாய் காவல்துறை முதன்மையாக கருதுகிறது. அல் காபி சமூகத்தில் நல்ல குடிமகனுக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறார்” என்றார்.

அல் காபிக்கு காவல்துறை பாராட்டுச் சான்றிதழை வழங்கி சிறப்பித்தது. சான்றிதழைப் பெற்றுக்கொண்ட அல் காபி இந்நிகழ்வு தன்னை மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணரவைத்ததாகத் தெரிவித்தார்.

Dubai-Police-honour-Emirati-for-returning-Dh12-000-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap