UAE Tamil Web

மூளை வளர்ச்சி குறைவான 4 வயது மகனின் சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த பெற்றோர் – முழு செலவையும் ஏற்பதாக துபாய் காவல்துறை அறிவிப்பு..!

Dubai Police

உணர்ச்சி, நடத்தை மற்றும் அறிவாற்றல் குறைவினால் அவதிப்பட்டுவந்த 4 வயது சிறுவனுக்கு துபாய் காவல்துறை உதவ முன்வந்திருக்கிறது. துபாய் காவல்துறைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இஸாத் (Esaad) எனப்படும் சலுகை அட்டை மூலம் அந்தப் பையனின் மருத்துவ செலவுகளுக்கு துபாய் காவல்துறை உதவுவதாக அறிவித்திருக்கிறது.

- Advertisment -

ஹோப் அபிலியேஷன் மெடிக்கல் செண்டர் (Hope Abilitation Medical Centre) உதவியுடன் சிறுவனுக்கு பயன்பாட்டு நடத்தை பகுப்பாய்வு (Applied Behavioural Analysis) போன்ற மேற்கட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இஸாத் அட்டை கமிட்டியின் தலைவரான மோனா அல் அம்ரி (Mona Al Amri) இதுகுறித்துப் பேசுகையில்,” மக்களிடையே மகிழ்ச்சியைப் பரப்பும் எங்களது திட்டத்தின் ஒருபகுதியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எளியவர்களின் மனிதாபிமான, கல்வி மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய நாங்கள் உழைக்கிறோம்” என்றார்.

“சிறுவனின் மருத்துவ செலவுகளை அவனுடைய பெற்றோரால் ஏற்க முடியவில்லை.  சிறுவனின் உடல்நிலை குறித்து அடிக்கடி விசாரித்து வருகிறோம். தேவை ஏற்படும்போது நிச்சயமாக உதவிக்கரம் நீட்டுவோம்” என அம்ரி தெரிவித்தார்.

“இஸாத் அட்டை கமிட்டி மற்றும் மருத்துவமனைக்கு நன்றி. எனது மகன் விரைவில் குணமாவான் என நான் நம்புகிறேன்” என சிறுவனின் தந்தை யூசப் இப்ராஹீம் தெரிவித்திருக்கிறார்.