UAE Tamil Web

மாஸ்க் போடலையா..? எனக் கேட்ட போலீசுக்கு சரமாரி அடிஉதை..!

Dubai Police

காவல்துறை அதிகாரியை தாக்கிய நபர் மற்றும் அதனை வீடியோ எடுத்த அவரது நண்பர் மீதான வழக்கு இன்று துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

என்ன நடந்தது?

துபாயின் நைஃப் பகுதியில் முகக்கவசம் இல்லாமல் சென்ற 46 வயது எகிப்திய நபரை காவல்துறை அதிகாரி நிறுத்தி கேள்வி கேட்டிருக்கிறார். அடையாள அட்டையை காண்பிக்க மறுத்த அந்நபர், காவல் அதிகாரியை தாக்கியதோடு, மோசமான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய 23 வயது காவல்துறை அதிகாரி,” முகக்கவசம் இல்லாமல் வந்துகொண்டிருந்த அவரிடம் அவருடைய அடையாள அட்டையைக் காண்பிக்கும்படிக் கேட்டேன். தனக்கு ஏற்கனவே முகக்கவசம் அணியாததால் தன்னுடைய அடையாள அட்டையை காவல்துறையிடம் சமர்ப்பித்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், அபராதத் தொகையை வாங்கிக்கொள்ளும்படி கூறினார். நாங்கள் அபராதம் வாங்க முடியாது எனத் தெரிவித்தேன். அவர் அங்கிருந்து தப்பிக்க முயன்றார். பின்னர் சக காவல்துறை அதிகாரிகள் அவரை சுற்றிவளைத்துப் பிடித்தனர்” என்றார்.

எகிப்தைச் சேர்ந்த நபர் காவல்துறை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, அவரது நண்பர் ஒருவர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்திருக்கிறார். காவல்துறை அதிகாரிகள் போனை ஒப்படைக்கும்படி கூறியும் அவர் அதனைக் கேட்கவில்லை. ஆகவே இருவரையும் காவல்துறை கைது செய்திருக்கிறது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் 3 மாத சிறைத்தண்டனை விதித்தது. மேலும் தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் இருவரும் நாடுகடத்தப்படவேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dubai Police
0 Shares
Share via
Copy link