UAE Tamil Web

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் உங்கள் புத்தாண்டு வாழ்த்து ஒளிர அருமையான வாய்ப்பு.!! அழைப்பு விடுத்த புர்ஜ் கலீஃபா..

bk

உலகையே முடக்கி போட்ட 2020-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் 23 நாட்களே உள்ளன. அடுத்து வர உள்ள 2021-ம் ஆண்டை அனைவரும் மிக பெரிதாக எதிர்நோக்கி உள்ளனர்.

- Advertisment -

அடுத்த வருடத்திலாவது கோவிட்-19 பெருந்தொற்றுக்கான உரிய தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு, அது அனைவருக்கும் பரவலாக விநியோகிக்கபட்டு தொற்று அச்சமின்றியும், முகக்கவசமின்றியும் முன்பு போல பொது வெளியில் நடமாட முடியும் என்ற பெரும் நம்பிக்கையில் காத்திருக்கிறன்றனர் உலக மக்கள்.

இந்நிலையில் ஒவ்வொரு புத்தாண்டு கொண்டாட்டங்களின் போதும் உலகின் உயரிய கட்டிடமான துபாயிலுள்ள புர்ஜ் கலீஃபா, வண்ண வண்ண லேசர் லைட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு, பின்னணயில் வான வேடிக்கைகள் சிதற கண்களுக்கு அற்புதமான விருந்தளிக்கும். கூடவே அக்கட்டிட திரையில் புதுவருடத்தை வரவேற்கும் வகையில் வாழ்த்துகள் மற்றும் வீடியோக்கள் காட்சிப்படுத்தப்படும்.

தொற்றுக்கு மத்தியிலும் அமீரகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திருப்பியுள்ள நிலையில், மக்களை உற்சாகப்படுத்த புர்ஜ் கலீஃபாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இந்த முறையும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நம்பிக்கை செய்தியை அனுப்பவும், உங்கள் வார்த்தைகளால் உலகை ஊக்கப்படுத்தவும் நீங்கள் விரும்புகிறீர்களா? இதோ அந்த வாய்பை உங்களுக்கு வழங்குகிறது புர்ஜ் கலீஃபா.

புது ஆண்டை வரவேற்கும் விதமாக வாழ்த்துகளை சிறப்பான வார்த்தைகளில் கோர்த்தளிக்கும் பொதுமக்களின் வாழ்த்து செய்தியை தேர்வு செய்து, அதனை திரை மூலம் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட உள்ளது புர்ஜ் கலீஃபா.

இது குறித்து அறிவிப்பு தந்துள்ள புர்ஜ் கலீஃபா,” உங்கள் அன்புக்குரியவர்களுக்கு 2021 புத்தாண்டுக்கான உங்கள் விருப்பங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் புர்ஜ் கலீஃபாவில் இடம்பெறும் வாய்ப்பைப் பெறுங்கள்! #BurjWishes2021 என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி அதிகபட்சம் 35 எழுத்துக்கள் என்ற வரம்பிற்குள் உங்கள் விருப்பங்களை இந்த பதிவின் கீழ் கமெண்டில் எழுதுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளது.

அருமையான புத்தாண்டு வாழ்த்துகளை பதிவிடும் நபர்களில் தங்களால் தேர்வு செய்யப்படுபவரின் வாழ்த்து செய்தி தங்களது மிக பெரிய ஸ்கிரீனில் உலகிற்கே காட்டப்படும் என்று புர்ஜ் கலீஃபா அழைப்பு விடுத்துள்ளது.