UAE Tamil Web

உலகப் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவில் 2021 புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடக்குமா.? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

nye

உலகின் மிக உயரமான கட்டிடமாக திகழும் புர்ஜ் கலீஃபாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தொற்று காரணமாக பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ளதால் வரப்போகும் புத்தாண்டை வரவேற்க புர்ஜ் கலீஃபாவில் ஏற்பாடுகள் செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது.

- Advertisment -

இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற புர்ஜ் கலீஃபாவில் 2021-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக வண்ணமயமான வானவேடிக்கை மற்றும் கண்கவர் ஒளி மற்றும் லேசர் காட்சிகள் அடங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் வழக்கம் போல நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை புர்ஜ் கலீஃபாவின் டெவலப்பரான எம்மார் ப்ராப்பர்ட்டீஸ்(Emaar Properties) இன்று அறிவித்துள்ளது. தொற்றுக்கு மத்தியில் அனைத்து பார்வையாளர்களுக்கும் பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, துபாய் அரசாங்க வழிகாட்டுதல்கள் மற்றும் உத்தரவுகளுக்கு ஏற்ப தெர்மல் கேமராக்கள், சமூக இடைவெளி, தொடர்பு இல்லாத கட்டணம் செலுத்தும் முறை, அடிக்கடி சுத்தம் செய்தல் மற்றும் கிருமி நீக்கம் உள்ளிட்ட பல தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளதாகவும் எம்மார் குறிப்பிட்டுள்ளது.

புர்ஜ் கலீஃபாவின் 2021-ம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு உலகளவில் நேரடியாக ஒளிபரப்பப்படும். உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணி முதல் mydubainewyear.com என்ற வெப்சைட்டில் கண்களுக்கு விருந்தளிக்கும் கொண்டாட்டங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும். எனவே உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் புர்ஜ் கலீஃபா புத்தாண்டு கொண்டாட்டங்களை பார்த்து மகிழலாம்.

எம்மாரின் நிறுவனர் முகமது அலபார் இது பற்றி கூறுகையில், உலகத்தரம் வாய்ந்த அனுபவங்களை வழங்குவது எங்கள் நிறுவனத்தின் வழக்கம். புத்தாண்டையொட்டி இந்த ஆண்டு இன்னும் பெரிய கண்காட்சி நிகழ்வை வழங்குவோம். உலகம் சவால்களை எதிர் கொண்டுள்ள நேரத்திலும் நாம் ஒன்றுபட்டுள்ளோம். இந்த ஆண்டிலிருந்து முன்பை விட வலுவாக மீண்டு வெளியே வருவோம். உலகிற்கு நம்பிக்கை, மகிழ்ச்சி மற்றும் நேர்மறை பற்றிய செய்தி சொல்ல விரும்புகிறோம்.

இங்கே நாம் சாத்தியமற்றதை அடைந்து, கற்பனை செய்யமுடியாத அளவிற்கு செயல்படுத்துகிறோம், நாங்கள் அதை மீண்டும் “Emaar NYE 2021″உடன் செய்கிறோம்’என்றார்.

ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு மற்றும் துபாய் மால் மாடிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் திறந்திருக்கும், மேலும் இரவு கொண்டாட்டங்களுக்கு முன்பதிவு செய்யப்படும். புர்ஜ் பார்க் குடும்பங்களை வரவேற்கும். உணவு மற்றும் பான விற்பனை நிலையங்கள் மற்றும் ஒரு பெரிய ஸ்கிரீன் உலகெங்கிலும் உள்ள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளைக் காண்பிக்கும்.