UAE Tamil Web

துபாய்: ஜும்ஆ தொழுகைக்காக 766 மசூதிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அரசு அறிவிப்பு..!

mosque

துபாய்: டிசம்பர் 4 ஆம் தேதி முதல் ஜும்ஆ தொழுகைக்காக 766 மசூதிகளை மீண்டும் திறக்க இருப்பதாக துபாயின் இஸ்லாமிய விவகார மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறை (IACAD) அறிவித்திருக்கிறது.

- Advertisment -

வழிபாட்டாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளை தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டதைத் தொடர்ந்து இம்முடிவை IACAD தெரிவித்திருக்கிறது.

“வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் பிரசங்கங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையிலிருந்து 766 மசூதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வழிபாட்டாளர்கள் சமூக விலகலை கடைபிடித்தல், சுகாதாரமாக நடந்துகொள்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். அதிகமான வழிபாட்டாளர்களுக்கு இடமளிக்கும் பொருட்டு, முன்னர் ஐந்து தினசரி பிரார்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட 60 பிற மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையையும் நடத்த அனுமதித்துள்ளோம்” என IACAD ன் தலைமை இயக்குனர் டாக்டர் ஹமாத் அல் ஷேக் அகமது அல் ஷைபானி (Hamad Al Sheikh Ahmed Al Shaibani) தெரிவித்தார்.

புதுப்பிக்கப்பட்ட கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறைகளை துறையில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் வழிபாட்டாளர்களும் கவனமாக பின்பற்றவேண்டும் என ஷைபானி குறிப்பிட்டார்.