UAE Tamil Web

டூரிஸ்ட் விசாவில் அமீரகம் வந்த தமிழர்.. துபாய் வந்த அடுத்த நாள் முதல் மாயம்.! கண்டுபிடிக்க உதவுமாறு உறவினர்கள் வேண்டுகோள்..

tamilar

டூரிஸ்ட் விசாவில் அமீரகம் வந்த தமிழர் ஒருவர் இங்கு வந்த ஒரு நாள் கழித்து மாயமாகியுள்ளார்.

- Advertisment -

நவம்பர் 9-ஆம் தேதி முதல் குறிப்பிட்ட தமிழரை காணவில்லை என்று அமீரகத்தில் உள்ள அவரது உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமீரகத்தில் காணாமல் போயுள்ள தமிழரின் பெயர் அமிர்தலிங்கம் சமயமுத்து. 46 வயதான இவர் காணாமல் போயுள்ளது பற்றி அவரது உறவினரான துரை மணிராஜா, கல்ஃப் நியூசிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், அமிர்தலிங்கம் சமயமுத்துவிற்கு மொத்தம் 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த நவம்பர் 8-ஆம் தேதி தமிழகத்திலிருந்து மேலும் 3 பேருடன் வேலை ஒன்றில் சேர துபாய் வந்தார். அவர்கள் அனைவரும் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் ஒரு தங்குமிடத்தில் தங்கினர். பின்னர் மறுநாள் காலை அமிர்தலிங்கம் வேலை நிமித்தமாக பணியிடம் சென்றார். அவர் திரும்பி வந்த பிறகு, தாங்கள் இரவில் வேலைக்கு சென்றதாக அவரது அறை தோழர்கள் கூறியதாக, ராஸ் அல் கைமாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள துரை கூறியுள்ளார்.

அறையில் தாம் மட்டும் தனியாக இருக்க வேண்டுமே என்று அமிர்தலிங்கம் வருத்தப்பட்டதாகவும், வெளியே செல்ல அவர் விரும்பியதாகவும் ஆனால் அதற்கு அறை தோழர்கள் வேண்டாம் என்று அவரிடம் கூறியதாகவும் துரை குறிப்பிட்டுள்ளார். அமிர்தலிங்கத்திடம் அமீரக சிம் கார்டு இல்லாததால், அவர் இங்கு வந்த பிறகு வீட்டிற்கும், எனக்கும் கால் செய்யவில்லை.

அவரிடமிருந்து அழைப்பு ஏதும் வராததால் அவரது குடும்பத்தினர் எனக்கு கால் செய்தனர். இதனை அடுத்து நான் அமிர்தலிங்கம் பற்றி விசாரிக்க, துபாயில் இருக்கும் எனது மைத்துனர் ஒருவரது உதவியை நாடினேன் என்று துரை கூறியுள்ளார். பின் தொடர் தேடலில் அமிர்தலிங்கம் பற்றிய தகவல் ஏதும் கிடைக்காகததால், கடந்த நவம்பர் 16-ம் தேதி இது குறித்து புகாரளிக்க அல் முரகாபத் காவல் நிலையத்தை அணுகியதாக, ஜெபல் அலியில் ஓட்டுநராக உள்ள துரையின் உறவினர் கண்ணன் நாகூர்கனி கூறியுள்ளார்.

மாயமாவதற்கு முன் அமிர்தலிங்கம் சென்ற நிறுவனத்தின் நிர்வாகி கல்ஃப் நியூசிடம் கூறுகையில்,அவர் வருகை விசாவில் இருப்பதாக கூறினார். மேலும் அமிர்தலிங்கம் தனது பாஸ்போர்ட்டையோ அல்லது பிற பொருட்களையோ எடுத்து கொள்ளவில்லை என்றார்.

இதனிடையே காணாமல் போன அமிர்தலிங்கத்தை கண்டுபிடிக்க உதவுமாறு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள கண்ணன், அவர் மாயமான போது நீல நிற சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய துணை தூதரகத்திடம் முறையீடு..

காணாமல் போனவர் குறித்து 2 வாரங்களுக்கும் மேலாக எந்த தகவலும் தெரியாத நிலையில், அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் முறையிட்டுள்ளனர். ஒரு ட்வீட் மூலம் புகாரைப் பெற்ற பின் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாக, இந்திய துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அவரை கண்டுபிடிக்க உறவினர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

விசா தேவைகளை பூர்த்தி செய்யாததற்காக பல நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ‘வேலை தேடுபவர்கள்’ விமான நிலையத்தில் நுழைவதற்கு மறுக்கப்பட்டதை அடுத்து, டூரிஸ்ட் / விசிட் விசாக்களில் வேலை தேடுவதற்காக துபாய்க்கு வரும் இந்தியர்கள் எச்சரிக்கப்பட்டனர். மேலும் டூரிஸ்ட் விசாக்களில் சுற்றுலா நோக்கம் கொண்டவர்கள் மட்டுமே வருவதை உறுதிசெய்ய தூதரகம் அறிவுறுத்தல்களை வழங்கியது.

இதனிடையே இ-மைக்ரேட் ஆன்லைன் ஆட்சேர்ப்பு போர்ட்டல்(e-Migrate online recruitment portal) மூலமாக மட்டுமே இந்திய ப்ளூ காலர் தொழிலாளர்களை ஆட்சேர்ப்பு செய்ய வேண்டும் என்றும், முதலாளிகள் மற்றும் பணியாளர்கள் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவிட்-19 தொற்றுக்கிடையே துபாய் வந்த பின் மாயமாகியுள்ள இரண்டாவது இந்தியர் அமிர்தலிங்கம் ஆவார். இதற்கு முன் விசிட் விசாவில் அமீரகம் வந்த கேரளாவை சேர்ந்த ஆஷிக் செனோத் துரும்மல் வழிதவறிய சென்று மாயமான பின் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.