UAE Tamil Web

துபாயிலிருந்து காணாமல் போன தமிழர் மருத்துவமனையில் கண்டுபிடிப்பு.! மகிழ்ச்சியில் உறவினர்கள்

tamilar

டூரிஸ்ட் விசாவில் துபாய் வந்து ஒரு நாள் கழித்து காணாமல் போன தமிழர் அமிர்தலிங்கம் சமயமுத்து(46), துபாய் மருத்துவமனை ஒன்றில் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

கடந்த நவம்பர் 8-ம் தேதி தமிழகத்திலிருந்து 3 பேருடன் அமீரகம் வந்த 4 குழந்தைகளின் தந்தையான அமிர்தலிங்கம் சமயமுத்து, நவம்பர் 9-ம் தேதி முதல் தங்குமிடத்திலிருந்து மாயமானார். இது தொடர்பான விரிவான தகவல்களை அண்மையில் நாம் பதிவு செய்திருந்தோம். அதனை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

அமிர்தலிங்கம் சமயமுத்து மாயமானது பற்றி அவரது உறவினர் முறையான கண்ணன் நாகூர்கனி அல் முரகாபத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கண்ணனை தொடர்பு கொண்ட துபாய் போலீஸார், அமிர்தலிங்கம் சமயமுத்துவை கண்டுபிடித்து விட்டதாகவும். அவர் தற்போது மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் இருப்பதாகவும் கூறி உள்ளனர்.

பின்னர் அதிகாரிகள் அமிர்தலிங்கம் சமயமுத்துவிடம், கண்ணன் நாகூர்கனியை போனில் பேச வைத்துள்ளனர். காவல் நிலையம் சென்று நடைமுறைகளை முடித்த பின்னர் அமிர்தலிங்கம் சமயமுத்துவை நேரில் சந்திக்க உள்ளதாக ஜெபல் அலியில் ஓட்டுநராக பணியாற்றும் கண்ணன் நாகூர்கனி கூறியுள்ளார்.

மேலும் தகவல் தெரிவித்துள்ள நாகூர்கனி, அமிர்தலிங்கம் சமயமுத்துவிற்கு மனநலம் சிறிது பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் எப்படி அனுமதிக்கப்பட்டார் என்பது பற்றி எனக்குத் தெரியாது. சில நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும். தற்போது நன்றாக இருப்பதாகவும் அமிர்தலிங்கம் தன்னிடம் பேசும்போது கூறியதாக நாகூர்கனி குறிப்பிட்டுள்ளார்.

அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினருக்கு அவர் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். துபாய் போலீஸாருக்கு நன்றிகளை தெரிவித்தனர். அவரைக் கண்டுபிடிக்க எங்களுக்கு உதவிய துபாய் காவல்துறைக்கு நாங்கள் நன்றி கூறி கொள்கிறோம் என்று கண்ணன் நாகூர்கனி கூறியுள்ளார்.